பரலி வைத்யநாதம் ( தரிசனநாள்.25.12.2024).
ஜோதிர்லிங்கம்.
மகாராஷ்ரா மாநிலத்தில், பரலிவைத்யநாதம், அனுப்நாகநாத், கிரினேஷ்வர், திரியம்பகேஷ்வர், பீமாசங்ககர் என்ற ஐந்து ஜோதிர்லிங்கங்கள் உள்ளன.
பரலிவைத்யநாதம் என்ற பெயரில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு கோவில் உள்ளதால், ஜார்கண்ட் மாநில கோவில் தான் ஜோதிர்லிங்கம் என்றும் கூறுவர். இதே போன்று நாகநாத் என்ற கோவிலும் தாருகாவனே நாகநாத் என்று குஜராத் மாநிலத்தில் உள்ள கோவிலே ஜோர்திங்க ஆலயம் என்ற கருத்தும் பக்தர்களுக்கிடையே உள்ளது.
ஜோதிர்லிங்கம் என்றால் என்ன?
ஜோதி வடிவமாக இருந்த சிவபெருமான் பக்தர்கள் மனதில் எளிதில் அமர்வதற்காக லிங்கவடிவமாக அமர்ந்த கோவில்களே ஜோதிர்லிங்கங்கள் என்று கூறுவர்.
ஊர் சிறப்பு (பரலி வைத்யநாதம்)
மகாராஷ்ட்ரா மாநிலம் பீட் என்ற மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த ஊர். ஊர் பெயரே பரலி வைத்யநாத் என்று இறைவன் பெயராலேயே அழைக்கப்படுகிறது. சத்தியவான் சாவித்ரியின் தந்தையான அசுவபதி என்ற அரசன் ஆட்சி செய்த ஊர். மார்கண்டேய மகரிஷியின் இளமைபருவம் இந்த ஊரில் கழிந்ததாக வரலாறு கூறுகிறது. 1706 ஆம் ஆண்டு ராணி அகல்யாபாய் அவர்களால் கட்டுமானம் வளர்சியடைந்தது.
பயணஅனுபவம்.
நானும் என் கணவரும், இந்த பயணத்தை சொந்தமாக திட்டமிட்டு பயணித்தோம். இது மகிழ்சியையும், நிறைவையும், பெருமை, மற்றும் புதிய அனுபத்தையும் கொடுத்தது. மற்ற பயண ஏற்பாட்டாளர்கள், கோவில்களை மட்டுமே திட்டமிட்டதாலும், முன்பே நாங்கள் தரிசனசெய்த புனிததலங்கள் அட்டவணையில் இருந்ததாலும், நாங்கள் சுயமாக பயணம் செய்ய முடிவெடுத்தோம்.
சீரடி, சனிசிங்கனாப்பூர், கோலாப்பூர் மகாலெஷ்மி, பூனா கணபதி கோவில்கள், பண்டரிபுரம் என்ற ஆன்மீக தலங்களும், எல்லோராகுகை, லோனாவாலா, என்று பல இடங்களை பல்வேறு தருணங்களில் நாங்கள் சுற்றுலாவாக சென்ற காரணத்தால், எங்களுக்கு கிடைத்த ஒருவாரகால அவகாசத்தை பயன்படுத்தி இந்த பயணதிட்டத்தை திட்டமிட்டோம்.
பயணதிட்டம்.
23.12. 24 – சென்னை – பூனா (புகைவண்டி)
24.12.24 – பூனா – பரலிவைத்யநாத். (புகைவண்டி- இரவு பயணம்)
25.12.24 - பரலிவைத்யநாதம் மற்றும் நாகநாத் தரிசனம்.
26.12.24 – பரலிவைத்யநாத் - ஒளரங்காபாத் பயணம் (புகைவண்டி) மற்றும் கிரினேஷ்வர் தரிசனம்.
27.12.24 அஜந்தா குகை சுற்றுலா
28.12 24- ஒளரங்காபாத் - நாசிக் புகைவண்டி பயணம், திரியம்பகேஷ்வர் மற்றும் நாசிக் தரிசனம்
29.12.24. பீமாசங்கர் தரிசனம் செய்து பூனா பயணம் பேருந்தில்.
30.12.24 – மாலை பூனா – சென்னை புகைவண்டி பயணம்
இந்த பயணதிட்டத்தில் மறுபாடுகள் நிறைய ஏற்பட்டது. பீமாசங்கர் தரிசனம், பீமாசங்கருக்கும், நாசிக்குக்கும் போதிய பேருந்து வசதியின்மையால்; எங்களால் ஒத்திவைக்கப்பட்டது.
பரலி அனுபவம்.
அதிகாலை 5.30 க்கு வரவேண்டிய புகைவண்டி, 5.05 மணிக்கே வந்து விட்டதால், நாங்கள் எங்களின் காலை நடை பயிற்சியை பரலியில் முடித்தோம். நாங்கள் முன்பதிவு செய்திருந்த அறையும் கோவிலுக்கு மிக அருகில் இருந்ததால்,அதிக கூட்டம் இல்லாமல் நிதானமாக தரிசனம் செய்து மகிழ்ந்தோம். ஹர ஹர மகாதேவா.
No comments:
Post a Comment