சப்தமங்கைதலங்கள்.


 சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025) 



அமைவிடம்

கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது.

சப்த மங்கையர்கள் தோற்றம்.

காளி அம்மன், சண்ட, முண்ட, ரக்தபீஜ அரக்கர்களை வதம் செய்ய எல்லாதேவர்களும் உதவி செய்தனர். இந்த தேவர்களிடமிருந்து தோன்றியவர்களே இந்த சப்த கன்னிகைகள்.

1.பிராஹ்மி.

பிரம்மனிடமிருந்து, நான்கு தலைகளுடனும், கையில் அட்சரமாலை மற்றும் கமண்டலமும் தாங்கி, ஹம்ச வாகனத்தில் தோன்றியவளே, பிராஹ்மி.

2.மாகேஸ்வரி.

மகேசனிடமிருந்து தோன்றியவள் மாகேஸ்வரி. கையில் சூலத்தை ஏந்தி சந்திரனை சூடிக்கொண்டு தோன்றினாள்.

 3.கௌமாரி.

குமரக்கடவுளின் சக்தியாக வேலை ஏந்தி தோன்றியவளே, கௌமாரி.

4.வைஷ்ணவி.

விஷ்ணுவின் அம்சமாக சங்கு சக்கரத்துடன் தோன்றியவளே வைஷ்ணவி.

5. வாராகி.

வராக மூர்தியிடம் தோன்றியவள் வாராகி;

6. இந்திராணி

இந்திரனின் சக்தியாக வஜ்ர படையுடனும், ஆயிரம் கண்களுடனும் தோன்றியவள் இந்திராணி.

7. சாமுண்டி .

அனைத்து சக்திகளும் ஒன்றாக திரண்டவளே சாமுண்டி.

இந்த ஏழு கன்னிகைகளும் காளி தேவிக்கு உதவிட கிளம்பினர். இதற்குமுன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலங்களுக்கு சென்று சிவனை வழிபட்டனர் அவர்கள் வணங்கிய சிவாலயங்களே சப்த மங்கை தலங்கள் என்றானது.

 இவ்வுலகுக்கு தாயான ஆதிபராசக்தி  சப்தகன்னிகைகள் பெற்ற வரத்தை தரிசனம் செய்ய வந்தாள். அவையாவன,

1.நெற்றிக்கண் தரிசனம்

2.கங்காதேவி தரிசனம்

3.திரிசூல தரிசம்

4.பாததரிசனம்

5.உடுக்கை தரிசனம்

6. மூன்றாம்பிறை தரிசனம்

7. நாக தரிசனம்

 இந்த புண்ணிய தலங்களை, நாதசன்மா – அனவித்தை என்ற தம்பதிகளும் ஒருசேர தரிசனம் செய்து பேறு பெற்றனர்.

1. சக்கரமங்கை (சக்கரப்பள்ளி) (பிரபஹ்மி-பூஜித்தலம்.)

ஐயம்பேட்டை அருகில் சக்கரபள்ளி என்ற இடத்தில் அமைந்துளள்ளது. சக்கரவாக பறவை தவமிருந்து பூஜித்த தலம் அதனால் இத்தல இறைவன் சக்கரவாகீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். பிரம்மா சக்கரவாக பறவையாக பறந்து சென்று சிவனின் முடியை தரிசனம் செய்ய முடியாமல் போனதால், மிகவும் வருந்திய, பிரம்மா இத்தலத்தில் மகாதேவனை பூஜித்தார்.

நாதசன்மா-அனவித்தை தம்பதிகளுக்கு இத்தல தேவி வேதநாயகி சிறுமியாக காட்சி கொடுத்தாள். (பெண்களின் ஏழு பருவத்தில் இது முதல் பருவம்). இந்த வேதநாயகியின் வலது திருபாதம் சற்று முன்னோக்கி அமைந்துள்ளது. இது அம்பிகை நம்மை உடனே காக்கவருவாள் என்பதை குறிப்பதாக உள்ளது.

தேவாரபாடல் பெற்ற தவம்

திருஞானசம்மந்தரால் பாடப்பெற்ற தலம். இத்தலம், தேவாரபாடல் பாட பெற்றதலம், சப்தமங்கை பூஜித்த தலம், மற்றும்; சப்தஸ்தான தலம் என்று பல சிறப்புகளை பெற்று திகழ்கிறது.
















2.அரிமங்கை (அரியமங்கை) மகேஸ்வரி-பூஜித்ததலம்

அமைவிடம்

ஐயம்பேட்டை மற்றும் பசுபதிகோவில் இடைப்பட்ட ரயில்பாதையிலிருந்து ஒரு கிமீ. தொலைவில் அமைந்துள்ள சிறிய கோவில்.

 காசி தம்பதிகளுக்கு “பெதும்பை” பருவத்தினளாக (பள்ளி பருவம்) ஞானாம்பிகை காட்சி கொடுத்தார். மகாலெஷ்மி திருமாலை ஒருநாளும் பிரியாதிருக்க சிவனை பூஜித்ததலம். சப்த மங்கையில் ஒருவரான மகேஸ்வரி வழிபட்டவுடன், அம்பிகை அவளின் சிரசில் உள்ள கங்கையை பொங்கச்செய்து, அற்புததரிசனம் அருளினார். விஷ்ணுவும் இத்தல சிவனை வழிபட்டதால் “ஹரிமுக்தீஸ்வரர்” என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

இத்தலத்தை நாங்கள் இப்பொழுதான் முதல்முறையாக தரிசனம் செய்கிறோம்.

தற்போதைய நிலை.

இறைவனை ஆராதனை செய்ய எந்த அர்சகர்களும் இல்லை. துப்புரவு பணி செய்யும் பெண், இறைவன் சன்னதியை நன்கு பராமரித்து விளக்கேற்றி, நாங்கள் வந்த நேரத்தில் தீபஆராதனையும் செய்தது, எங்களுக்கு மிக்க மகிழ்சியளித்தது.







3. சூலமங்கை (சூலமங்கலம்) (கௌமாரி வழிபட்ட தலம்)

“கந்தசஷ்டிகவசம்” புகழ் “சூலமங்கலசகோதரி”களின் ஊரும் இதுதான். பசுபதிகோவில் ரயில் நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள நல்ல பெரிய கோவில். நாதசன்மா – அனவிந்தை தம்பதிகளுக்கு “மங்கை”  பருவத்தினளாக தரிசனம் தந்தாள் இத்தல அம்மன். பிருத்திவாகேஸ்வரர் என்று இறைவன் அழைக்கப்படுகிறார்.

தேவாரபாடல் பெற்ற தலம் இல்லை என்றாலும், ஞானசம்மந்தர் அருளிய பாடலில் இத்தலத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்த குறிப்பு கோவில் கல்வெட்டில் குறிப்பாக உள்ளது. இந்த புகைபடத்தை நான் வெளியிடுகிறேன். இத்தல இறைவனை வேண்டி சூலவிரதம் மிருந்து, மகாவிஷ்ணு வழிபட்ட தலம். பிரும்மன் இத்தல இறைவனை வேண்டி வயிற்றுவலி நீங்பெற்ற தலம்.

எங்கள் அனுபவம்.

காலை எட்டு மணிக்கு இறைவனை வழிபட சென்றோம். கோவில் கதவை திறக்கயாரும் வரவில்லை. அரை மணிநேரம் காத்திருந்து திரும்பினோம். மீண்டும் 10.30 மணிக்கு சென்று கோவில் குருக்கள் கொடுத்த எண்ணிற்கு அழைப்பு விடுத்துவிட்டு காத்திருந்தோம். சற்று நேரம் கழித்து காவல் பணிபுரியும் நபரின் மனைவி வந்து கோவில் கதவை திறந்து விளக்கேற்றியப்பின் வழிபட்டு திரும்பினோம். 


























4. நந்திமங்கை. (நல்லிச்சேரி) வைஷ்ணவி பூஜித்ததலம் 

அமைவிடம்

ஐயம்பேட்டையிலிருந்து 3கி;மீ. தொலைவில் உள்ளது.

நல்லிச்சேரியும் நானும் 

இது எனது கணவரின் பூர்வீகம். அதனால் நாங்கள் அடிக்கடி இங்கு செல்வோம். இவ்வூர் வேணுகோபால சுவாமி பற்றிய பிளாக்,  “விஜயராகவநாயகர்” என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். எனது தந்தையும் ஐயம்பேட்டை பஜார் தபால் நிலையத்தில் போஸ்மாஸ்டராக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். (1980-மே முதல்1982 மே வரை) அதனாலும் இந்த பகுதி ஊர்களை நான் நன்கு அறிவேன்.பிளாக் எழுதுவதால் அதிகமான பிளாக்குகள் படிக்கும் வாய்பு ஏற்படுகிறது. இந்த “சப்தமங்கை தலங்கள்” (Thanks to Sivarpanam.blogspot.com)என்ற பிளாகை படித்தவுடன்தான் நான் இத்தல மகிமைகளை தெரிந்து கொண்டேன். நானும் நாதசர்மா மற்றும் அனவிந்தை தம்பதிகள் போன்று நடந்து சென்றே இத்தலங்களை தரிசனம் செய்ய விரும்பினேன். ஆனால் எங்களுக்கு நேரம் இல்லாததாலும், (அன்று இரவே பெங்களுருக்கு பயனச்சீட்டு முன்பதிவு செய்திருந்தோம்) மற்றும் என்கணவருக்கு என்னால் முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டதாலும், நாங்கள் வாகனத்தில் பயணித்தோம்.  வடநாட்டு தம்பதியர் போன்று  ஸப்தஸ்தானம் அன்று பல்லக்குடன் நடந்து சென்று, வழிபட, இறைவனிடம் பிரார்தனை செய்தேன்.

நந்திமங்கை சிறப்பு

நந்திகேஸ்வரர் திருவையாறில் பஞ்சாட்சர மந்திரத்தை இறைவனிடமிருந்து உபதேசம் பெற்று, இந்த நந்திமங்கையில் பாதரிசனம் பெற்றார். சப்த கன்னிகைகளின் ஒருவரான வைஷ்ணவி தேவியும், இத்தல இறைவி அகிலாண்டேஸ்வரியும் இறைவனின் பாத தரிசனம் பெற்ற இடம் என்று இத்தல வரலாறு கூறுகிறது. இரட்டை பிள்ளையார் சன்னதி தனிசிறப்பு பெறுகிறது.      காசி போன்றே மயானம் எதிரில் இறைவன் ஜம்புகேஸ்வரர் சன்னதியுள்ளது. இதன் காரணமாக இது மோட்ஷதலம் என்று அறியப்படுகிறது. வயலுக்கு இடையில் பசுமையாகவும் பொலிவுடனும் இக்கோவில் சிறப்புற்று விளங்குகிறது. இக்கோவில் அர்சகர்கள் (வெங்கடேசன், நடராஜன்) சகோதரர்கள் இருவரும் இன்றளவும்  இவ்வூரிலேயே தங்கி இறைபணி செய்துவருகின்றனர். நாங்கள் இவர்கள் வீட்டில்தான் தங்கி உணவருந்துவோம். 















5. பசுபதி மங்கை (வாராகி வழிபட்ட தலம்)

அமைவிடம்

நல்லிச்சேரி கிராமத்திலிருந்து சுமார்1.கி.மீ. தொலைவில் பசுபதி கோவில் என்ற கிராமத்தில் அரசு பள்ளி அருகில் இக் கோவில் அமைந்துள்ளது.

“செங்கோட் சோழன் நயனார்” கட்டிய “மாடக்கோவில்” வகையை சேர்ந்தது இந்த கோவில். வாராகி ஈசனின் ஆதிநாதமாகிய உடுக்கை நாதத்தை கேட்டு உய்ந்தாள். நாதசன்மா – அனவித்யா தம்பதிகளுக்கு இத்தல இறைவி பால்வளநாயகி “அரிவை” என்ற தாய்பருவத்தில் காட்சி கொடுத்தார். மிக கம்பீரமான  பெரிய நிலப்பரப்பில் அமைந்த கோவில். (யானைபுகாகோவில் என்ற) மாடக்கோவில் என்பதால், நல்ல உயரத்தில் இறைவன் சன்னதி அமைந்துள்ளது. எங்கள் ஊர் அர்சகரே இங்கேயும் பூஜை செய்வதால்,  தீபாராதனை, மற்றும் வழிபாட்டு சிறப்பாக அமைந்தது.
















6. தாழமங்கை (இந்திராணி வழிபட்ட தலம்).

அமைவிடம்

தஞ்ஜாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் பசுபதிகோவில் அருகில் அமைந்துள்ளது. இந்திராணி இத்தல இறைவன் சந்ரமௌலீஸ்வரரை வணங்கிய பின் காளிதேவிக்கு துணையாக போரிட சென்றால். ஆதிவித்தாக சிருஷ்டி காலத்தில் அம்பிகை விளங்கிய தலம். ராஜராஜேஸ்வரி என்ற நாமத்தில் அம்பாள் அருள்பாலிக்கிறார்.  கோவில் புது பொலிவுடன் விளங்குகிறது. இத்தலத்தில் ஒரு புண்ணிய விட்ருஷம்(மரம்) ஒன்று உள்ளது. தமிழ்நாட்டில் வேறுஎந்த கோவிலிலும் இவ்வகை மரம் கிடையாதாம்.

நாதசன்மா- அனவித்தை தம்பதிகளுக்கு அன்னை ராஜராஜேஸ்வரி “தெரிவை” வடிவில் பேர் அன்னையாக காட்சி கொடுத்தார். ராஜ ராஜ சோழன் அவர் ஜென்ம நட்சத்திரமான சதயம் அன்று இங்கு வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. எங்கள் ஊர் குருக்களின் நண்பர் தான் இங்கு பூஜை செய்வதால் எங்களுக்கு நல்ல படியாக இறைவன் தரிசனம் கிடைத்தது. 






7. திருபுள்ளமங்கை (சாமுண்டி வழிபட்ட தலம்)

அமைவிடம்

தஞ்ஜாவூர்-கும்பகோனம் நெடுஞ்சாலையில் பசுபதிகோவிலிருந்து ஒரு கி;.மீ. தொலைவில் உள்ளது. என்னுடைய அப்பா ஐயம்பேட்டையில் பணியாற்றிய காலத்தில், நான் பலமுறை இத்தலத்தை தரிசனம் செய்துள்ளேன். 

தேவார பாடல் பெற்ற தலம்.

திருஞானசம்மந்தரால் பாடல்பெற்ற தலம். இங்கு நாகதோஷவழிபாடு சிறப்புற்றுள்ளது.  முதலாம் பராந்தக சோழன் கட்டிய கற்றலி கோவில் மிக சிறப்புற்று விளங்குகிறது.  சிற்பங்கள் அனைத்தும் கலைநயத்துடன் காட்சிஅளிக்கிறது. நாதசன்மா – அனவிந்தை தம்பதிகளுக்கு இத்தல நாயகி பேரிளம் பெண் வடிவில் காட்சி தருகிறார்.

இத்தம்பதியினர் மாயுரநாதரையும்  கௌரி அம்மனையும் தரிசனம் செய்து, சிவபதம் அடைந்தனர். மாயவரத்தை சுற்றியும் சப்தமங்கை தலங்கள் உள்ளனவாம். இத்தலங்களையும் நான் தேடி தரிசனம் செய்ய விழைகின்றேன்.














கூடுதல் தகவல்கள்.

திருவையாறு போன்ற சப்தஸ்தான திருவிழா.

 இந்த ஏழு கோவில்களும் திருவையாறு சப்தஸ்தானம் போன்று இங்கேயும் சப்தஸ்தான விழா கொண்டாடப்படுகிறது. ஏழு ஊர் இறைவன் வீதியுலா மற்றும் கண்ணாடி பல்லக்கும் மிகவும் புகழ்வாய்ந்தவை. பங்குனி மாதம், சித்ரா நட்டத்திரத்தன்று இந்த பல்லக்கு விழா நடை பெறுகிறது.

திருவையாறு சப்தஸ்தான தலங்கள்

திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருகண்டியூர், திருபூந்துருத்தி, திருநெய்தானம்.

பெண்களின் ஏழு பருவங்கள்

1. பேதமை 5-7 வயது.

2.பெதும்பை 8-11 வது.

3.மங்கை 12-13 வயது.

4.மடந்தை 14-19 வயுது

5.அரிவை 20-25 வயது.

6.தெரிவை. 26-31 வயது

7.பேரிளம்பெண் 32-40 வயது. 

வாய்ப்பு




12.7.2025 அன்று என் கணவரின் இரண்டாவது அண்ணனின், 70வது பிறந்தநாள், (பீமரதசாந்தி) நல்லிச்சேரி, அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புநாதஸ்வாமி  கோவிலில் சிறப்பாக நடை பெற்றது. மறுநாள் 13.7. ஞாயிறு அன்று நாங்கள் இந்த சப்தமங்கைதலங்களை தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றோம்.











































No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...