திருவக்கரை. (தரிசனநாள்-4.8.2023)
வரலாற்று சான்று.
வராக நதி என்ற சங்கராபரணியாற்றங்கரையில் வடக்குபக்கமாக 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஆதித்த சோழனால் கட்டப்பட்டதாக, இந்த கோவில் மக்களால் அறியப்படுகிறது. பராந்தக சோழனின் மகன் ராஜாதித்த சோழன், இக்கோவிலுக்கு நிதிஅளித்ததாக வரலாறு கூறுகிறது. ராஜாதித்த சோழனின் தம்பி கண்டராதித்த சோழன் இக்கோவிலின் கோபுரத்தை கட்டியதால், கண்டராதித்த கோபுரம் என்று இக் கோவில் கோபுரம் அழைக்கப்படுகிறது.
மூன்று தெய்வங்கள்.
சிவன், சக்தி, நாராயணன் என்று மூன்று தெங்வங்களும் சிறப்புடன் வளங்குகின்றனர். அமிர்தாம்பிகை (எ) வடிவாம்பிகை, சமேத சந்திரமௌலீஸ்வரர், வக்ரகாளி, வரதராஜபெருமாள். என்று, ஒருசேர அனைவரும் சிறப்புற்றுறிருக்கின்றனர்.
வக்ராசுரன்.
வக்ராசுரன் சிவபெருமானை அவனின் கண்டத்தில் (தொன்டை பகுதி) வைத்து கடுமையான தவம் புரிந்தான். இவன் மேல் இரங்கி இவனுக்கு சாகாவரம் அளித்தார். ஆணவம் தலைக்கேற கொடுமைகள் செய்ய தொடங்கினான். இவனை அழிக்க சிவன் நாராயணிடம் அன்பு கட்டளை இடுகிறார்.
வரதராஜபெருமாள்.
சக்ராயுதத்தால் அசுரனை அழித்த பெருமாள் வரதராஜன் என்ற பெயரில் காஞ்சி வரதராஜர் போன்றே மேற்கு முகமாக சங்கு சக்ர கதாதாரியாக தனி சன்னதியில் மக்களுக்கு அருள்பாலிக்கிறார்.
வக்ரகாளி.
அசுரனின் தங்கை துன்முகி என்பவள் அண்ணனுக்கு நிகராக அட்டகாசம் புரிகிறாள். இவளை வதம் செய்ய ஈசன் அம்பிகைக்கு கட்டளையிடுகிறார். பூலோகத்துக்கு வந்த தேவி துன்முகி கர்பமாக இருப்பதை பார்த்து சற்று தயங்கி, பின் அந்த கருவை எடுத்து வலது காதிற்;கு குண்டலமாக அணிந்துகொண்டு, பின் வதம்செய்கிறார். சிவபெருமான் கோவிலாக இருந்தாலும், இக்கோவிலின் நாயகியாக இந்த வக்கரகாளி உள்ளார். ஒவ்வொரு பௌர்ணமியன்றும் சந்தன காப்பும், இரவு 12 மணிக்கு ஜோதி தரிசனமும் நடைபெருகிறது. ஒவ்வொரு அம்மாவாசையன்றும் பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெருகிறது. பக்தர்கள் இந்த இரண்டு நாளும் திரளாக வருகின்றனர்.
சந்திரமௌலீஸ்வரர்.
ஐந்து தலை நாகம் குடைபிடிக்க, மும்முகலிங்கமாக காட்சி தருகிறார். திருமூலர் திருமந்திரத்தில் பூஜைக்குரிய லிங்கமாக ஆறு லிங்கத்தை குறிப்பிடுகிறார். 1. அண்டலிங்கம், 2. பிண்டலிங்கம், 3. சதாசிவலிங்கம், 4. ஞானலிங்கம், 5. ஆத்மலிங்கம், 6. சிவலிங்கம். இவற்றில் சந்திரமௌலீஸ்வரர் ஞானலிங்கமாக தோன்றுகிறார்.
சுந்தரவிநாயகர்.
பெருமாளும், அம்பிகையும் அசுரனை வதம் செய்வதற்கு முன்பு இந்த சுந்தர விநாயகரை வழிபட்டு பின் சம்காரம் செய்கின்றனர். இந்த விநாயகர் கோவில் நேர் எதிர் வீதியில் உள்ளது. 10 அடி உயரத்தில் மிக கம்பீரமாக உள்ளார்.
பாடல்கள் பாடியவர்கள்.
கைலைநாதனே இந்த சந்திர மௌலீஸ்வரர் என்று அப்பரும், வடலூர் ராமலிங்க அடிகளார், திருஞானசம்மந்தர், அருணகிரிநாதர், சேக்கிழார் ஆகியோரும் இறைவன் புகழ்பாடி பரவசம் அடைந்துள்ளனர்.
குண்டலினிசித்தர்.
இந்த ஆலயத்திலேயே வாழ்ந்து, தவம்இயற்றி சிவலிங்கத்தோடு ஐக்கியமாகி சமாதியானவர். தெற்கு பகுதியில் சமாதியடைந்த இடத்தில் லிங்கம் அமைக்கப்பட்டு, தனி சன்னதி உள்ளது. எதிரில் தியான மண்டபம் உள்ளது.
வக்ர நடராஜர்.
இடது கால் இல்லாமல் வழக்கத்திற்க்கு மாறாக வலது காலை தூக்கி நின்றாடும், விலைமதிப்புள்ள நடராஜர் விக்ரகம் இக்கோவிலில் உள்ளதாம். இதை நாம் யாரும் காண இயலாது. இந்த அறிய தகவல். விகடன் புத்தகம் வெளியிட்ட “நிம்மதி தரும் சந்நிதி பாகம்-1” புத்தகத்தில்" கிருஷ்ணானந்த சுந்தர்ஜி "அவர்களின் இக் கோவில் பற்றிய கட்டுரையில் உள்ளது. அதன் பொருள் மதிப்பு கருதி பத்திரப்படுத்தப்பட்டுள்ளதாம்.
மதுரை சுந்தரேஸ்வரர் சன்னதி.
64 கலைகளிலும் வல்லவனான ராஜசேரபாண்டியன், ஒருநாள் பரதம்ஆடி ஏற்பட்ட கால்வலியில், எப்பொழுதும் காலை தூக்கி கொண்டடிருக்கும் நடராஜ தெய்வத்தை நினைவுகூறுகிறான். ஆட்டத்தை நிறுத்திவிட்டால் இந்த உலகத்தின் இயக்கமே நின்றுவிடுமே, ஈசனின் மேல் அதிக பக்கதி கொண்ட மன்னன், இறைவனின் கால்வலியை நினைத்து மிகவும் வருந்துகிறான். நீங்கள் கால் மாற்றி ஆடவில்லை என்றால் வாள் கொண்டு என் உயிரை மாய்த்துகொள்வேன் என்கிறான். மன்னனின், பக்திக்காக நடராஜர் வலது கால் தூக்கி நடனம் ஆடுகிறார். இது திருவளையாடல் புராணத்தில் 24வது படலமாக உள்ளது.
வக்ரம் விளக்கம்.
வக்ராசுரன் வதம் செய்த இடமாதலால், அனைத்து இடத்திலும் வக்ரம் உள்ளது. ஒழுங்கில்லாமலும், மாறி இருப்பது வக்ரம் என்று அழைக்கப்படும். உதாரணம். கர்நாடக சங்கீதத்தில் ச ரி க ம ப த நி ஸா என்று தொடர்ந்து வராமல், ஸ ம க ம ப த நி ஸா என்று ஒழுங்கு இல்லாமல் சுரம் வரும் ராகத்தை வக்ரராகம் என்று அழைப்பர். (Not by order)..
காளிக்கு அருகில் இருக்கும் லிங்கம் வக்ரலிங்கம், நந்தி ஈசனுக்குநேரே இல்லாமல் சற்று தள்ளி வக்ரமாக உள்ளது. நவகிரகத்தில் சனியும் வக்ர சனி. ஒழுங்காகசெல்லும் வாழ்கையின் இடையில் வக்ரம் ஏற்பட்டால் (பிரச்சனை, குழப்பம்) இத்தலத்திற்க்கு வந்து இறைவனை வழிபடுவது சிறப்பு.
வழி.
திண்டிவனத்தில் இருந்து மயிலம் வழியாகவும், விழுப்புரத்தில் இருந்தும் இந்த தலத்தைஅடையலாம்.