ஜோதிர்லிங்கத்தில் ஒன்றாகவும், சார்தாம் யாத்திரையில் மூன்றாவது இடமாகவும் உள்ள, மிகவும் புகழ்பெற்ற இந்த கேதார்நாத்க்கு(சார்தாம் யாத்திகர்களாக) 2022 ஆம் ஆண்டு நாங்கள் சென்றோம். இயற்கை இடற்பாடு காரணமாக எங்களுடைய சிவன் தரிசனம் தடைபட்டது. கேதார்நாதரை தரிசனம் செய்யமுடியாத எங்களின் மனநிலை, பஞ்சகேதாரையும் தரிசனம் செய்ய வேண்டும் என்ற மனநிலையை தூண்டியது. பஞ்சகேதார் தரிசனம் என்பது மிகவும் கடினமான யாத்திரைகளில் ஒன்றாகும்.
யாத்திரைக்கு அழைத்து செல்லும் பலரும், பஞ்சகேதார் யாத்திரை அழைத்து செல்ல தயங்குவர். இவர்களுக்கு இடையில், “தமிழ் அஞ்சல்” இவர்கள் மூலமாக நாங்கள் இந்த கடினமான பயணம் செய்ய முடிவெடுத்தோம்.
பஞ்சகேதார்.
1. கேதார்நாத் - (11755-அடி) சிவபெருமானின் முதுகு பகுதி.
2. மத்மகேஷ்வர் - (11450-அடி) சிவபெருமானின் வயிற்று பகுதி.
3. துங்கநாத் - (12073-அடி) சிவபெருமானின் கை மற்றும் தோள்
4 .ருத்ரநாத் - (11800-அடி) ஈஸ்வரனின் முகம்.
5. கல்பேஷ்வர் - (7217 –அடி) மகேஷ்வரனின் ஜடாமுடி.
ருத்ரநாத். (7.10.2024- தரிசனம்).
பஞ்சகேதார் தலங்களில் மிகவும் கடினமான பயணம் என்றால் அது ருத்ரநாத் தான். ஏற்றம் 23 கி.மீ. இறக்கம் 23 கி.மீட்டர். நாங்கள் காலை எட்டு மணிக்கு கிளம்பினோம். எங்களுடன் வந்தவர்களில் 7 பெண்கள் அவர்களால் இயலாது என்று இந்த ருத்ரநாத் தரிசனத்தை தவிர்த்தனர். நாங்கள் 17 பேர் பயணித்தோம். அதில் என்னையும் சேர்த்து மூன்று பெண்கள். மாலை 5 மணிக்கு கோவிலை அடைந்தோம்.
பயணஅனுபவம்.
மூன்று நாட்கள் குதிரையில் பயணித்ததால், பயணத்தின் கடினம் நாங்கள் அறிந்ததே. இறைவனை பிரார்த்தனை செய்து கொண்டு பயணத்தை தொடங்கினோம். ஆரம்பத்தில் நன்கு கட்டமைக்கப்பட்ட படிகள் இருபக்கமும் மலை வீடுகள் என்று ஆரம்பித்தாலும், வனத்துறையின் அனுமதி பெற்று அதற்கான கட்டணம் கட்டி காட்டு பகுதியில் எங்களின் பயணம் மிக பயத்துடனும், உடல் துன்பத்துடனும் தொடர்ந்தது. நான் செய்யத தவறுகள் இந்த துன்பத்தில் கழிந்ததோ என்று கூட என்னை சிந்திக்க வைத்தது. மிக செங்குத்தான மலையேற்றம். குதிரை 60 டிகிரி கோணத்தில் ஏறுகிறது. மூன்றுநாள் குதிரை பயணம் பயத்தை குறைத்து இயற்கையை ரசிக்க வைத்தது. “பித்ருதுவார்” என்ற இடத்தை கடந்தவுடன் குதிரைக்காரர் என்னிடத்தில் Danger Route Walk என்று சொல்லி குதிரையில் இருந்து இறக்கவிட்டார். மிக உயரமான இடத்தில் நடப்பது இல்லை ஏறுவது கடினமாக இருந்தது. காற்று மிகவும் பலமாக வீசியது. நல்ல குளிர் வேறு. 2 கி.மீ. நடந்து மீண்டும் குதிரையில் ஏறிக்கொண்டேன். மாலை5 மணிக்கு கோவிலை அடைந்தோம். அரை கி.மீ. நடந்து 100க்கு மேற்பட்ட படிகளில் நடந்து சென்றோம். சிறிய கோவில், கோவில் உள்ளே அரை மணி நேரத்திற்கு மேல் அமர்ந்திருந்தோம். பூஜை நேரத்தில் எங்களை வெளியேற்றிவிட்டனர்.
6.30 மணிக்கு பூஜை என்பதால், அங்கேயே காத்திருந்தோம். நிமிடத்திறக்கு நிமிடம் குளிர் அதிகரித்து கொண்டே இருந்தது. அபிஷேகம் செய்து, சங்கு ஊதி, உடுக்கை அடித்து வழிபாடு தொடந்து கொண்டே இருந்தது. நான் ஒரு ஓரத்தில் குளிர்தாங்காமல் உட்கார்ந்து விட்டேன். என்கணவர் சன்னதிக்கு எதிரில் மேற்கூறை இல்லாத இடத்தில் அமர்ந்து அவர் வழிபாட்டில் ழூழ்கி இருந்தார். ஒன்றறை மணி நேரம் தொடந்தது பூஜை. 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் இருந்தனர். வரிசையில் இறைவனை அருகில் சென்று வழிபட அனைவரும் சென்றனர். என் கணவர் என்னை இருட்டில் தேடி (சோலார் விளக்கு மட்டுமே, மின் விளக்கு கிடையாது) தரிசனம் செய்தாயா? என்று கேட்டார். நான் அடபோங்கப்பா எனக்கு மிகவும் குளிர்கிறது நாளை காலை சூரியன் வரட்டும் என்று கூறியதுதான் தாமதம் என்னை இழுத்து செல்லாத குறையாக அழைத்து சென்று வணங்க வைத்தார்.( கணவரின் செயலுக்கு நன்றி) அபிஷேகம் ஆராதனைசெய்து சந்தனம் சாற்றி மிகவும் சாந்தமாக, “அன்பேசிவமாக” அருள்பாலித்தார்.
பெண்கள் மண் வீட்டிலும் ஆண்கள் டெண்ட்டிலும் தங்கினோம். மறுநாள் காலை எழுந்து பற்களை துலக்கி மீண்டும் ஒரு முறை இறைவனை தரிசனம் செய்து விட்டு. 8 மணிக்கு கிளம்பினோம். வரும் சமயம் அனைவரும் கட்டாயமாக 6 கி.மீ. நடந்துதான் வர வேண்டும். இறங்கும் சமயம் குதிரையில் இருந்து நிலை தடுமாறி விழ வாய்பிருப்பதால், நடந்து செல்ல குதிரைகாரர்கள் வலியுறுத்தினர். விளக்கு வெளிச்சமின்மை, கழிவறை வசதியின்மை, மிகசாதரணமான உணவு என்று சிலவற்றை அனுசரித்து செல்ல வேண்டும்.(நூடில்ஸ் சாப்பிட கற்றுக்கொண்டால் எளிதாக இருக்கும்).
குதிரையுடன் கட்டப்பட்ட நான்.
நான் தொடர்ந்து 6 கி.மீ. மெதுவாக நடந்து சென்றதால், என் கணவர் குதிரையில் என்னை மீண்டும் ஏற்றிவிட்டு நீ செல் மிகமெதுவாக நடக்கிறாய் என்று சொல்லிவிட்டு அவர் நடக்க ஆரம்பித்து விட்டார். (கணவருக்கு ஹிந்தி பேச தெரியும். எனக்கு தெரியாது) குதிரைக்காரர்கள் இருவரும் (என் குதிரைக்காரரும் கணவரின் குதிரைக்காரரும்) அவர்களுக்குள் பேசி கொண்டு ஒரு நீண்ட துணியால் என்னிடுப்புபகுதியையும். குதிரை மேல் அமர்வதற்கு உருவாக்கப்பட்ட சேணத்துடன் என்னை கட்டி விட்டார்கள். (நான் விழமாட்டேனாம்) . (அறிவு கொழுந்து). சிறிது தூரம் சென்ற உடன் அவர்களிடம் ஜாடையில் பேசி எனது கஷ்டத்தை புரிய வைத்து கட்டிய துணியை கழட்டவைத்தேன். எங்களுடன் பயணித்தவர்களில்,கேதார்நாத்தில் இரண்டு பெண்கள் விழுந்ததாகவும், மத்மகேஷ்வரில் இரண்டு பெண்கள் விழுந்ததாகவும், பிறகு தெரிந்துகொண்டேன். நாங்கள் இறைவன் அருளால் மாலை 7 மணிக்கு சாகர் வந்தடைந்தோம்.
பித்ருதுவார்.
7000 அடி உயரமான இடத்தில் இருந்தாலும். கழுகை மட்டுமே பார்த்த நாங்கள், இந்த உயரத்தில் காகத்தை பார்த்து அதிசயித்தோம். மூதாதயருக்கு உணவு படைத்திருப்பர் போலும். ஆனால் நிச்சயமாக சமைத்த உணவு இருக்காது. திண்பண்டங்களாகதான் இருக்கக்கூடும்.
சிறப்பான தொகுப்பு
ReplyDeleteதங்களின் பயண தகவல் தொகுப்பு அருமை. எதிர்வரும் அனைவருக்கும் பயனுள்ளதாய் அமையும்.
ReplyDelete