மயிலாடுதுறை மாவட்ட தேவாரபாடல்பெற்ற தலங்கள். பகுதி-1.
2020 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றானது மயிலாடுதுறை.
துலாஸ்நானம் செய்துவிட்டு எங்களுடைய ஆலயவழிபாட்டை துவங்கினோம்.
துலாஸ்நானம்.
துலாமாதம் என்பது ஐப்பசி மாதமாகும். பகல் மற்றும் இரவு நேரம் சமமாக இருப்பதால் (தராசு போன்று) துலாமாதம் என்ற பெயர்பெற்றது. ஸ்நானம் என்றால் நீராடுவது என்று பொருள். ஐப்பசி மாதத்தில் அனைத்து நதிகளும் காவிரியில் கலப்பதால் இந்த மாதத்தில் காவிரியில் நீராடுவது மிகவும் புனிதமானதாகவும், சிறப்பானதுமாக கருதப்படுகிறது.
முடமுழுக்கு.
ஐப்பசி மாதம் மாற்றுத்திறனாளி ஒருவர் மைலாடுதுறை காவியாற்றில் நீராட விருப்பமுற்று கிளம்பினார். அக்காலகட்த்தில் போக்குவரத்துவசதியின்மை காரணமாக நடந்தே சென்றதால் மாதம் நிறைவுபெற்றது. அன்று இரவு கோவில் மண்டபத்தில் தங்கி இறைவனிடம் அவரின் இயலாமையை கூறி வருந்தினார். இறைவன் கனவில் தோன்றி வருந்தாதே கார்திகை மாதம் ஒன்றாம் தேதியாகிய நாளையும் காவிரியில் நீராடினாலும் உனக்கு ஐப்பசிமாதம் நீராடிய பலன் கிடைக்கும் என்று கூறினார். இந்த முடவனின் பக்தியால் நாமும் நீராட ஒருநாள் அதிகமாக கிடைக்கப்பெற்றோம். கார்திகை ஒன்று நீராடுதலே முடவன் முழுக்கு என்றாகியது.
சோழீச்சுவரர்.
துலாஸ்நானம் செய்துவிட்டு, குற்றாலம் உக்தவேதீச்சுவரர் கோவிலுக்கு கிளம்பினோம். எங்களது ஓட்டுனர் சோழீச்சுவரர் கோவில் வாசலில் நிறுத்தி இதுதான் நீங்கள் குறிப்பிட்ட கோவில் என்று கூறி எங்களுக்கு சோழீச்சுவரர் அருள்கிடைக்க உதவினார்.
இந்த சிவன் “சொன்னவாறு அறிவார்” என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். இத்தல அம்மன் பரிமளசுகந்தநாயகி என்ற சௌந்தரநாயகி.
சுயம்பு சனீச்சுவரர்.
தேவர்களும், மகரிஷிகளும் இறைவனை வழிபட வந்த போது, சனீஸ்வரன் அமிர்தகலசத்துடன், பூமியில் இருந்து தோன்றியதால், பாதாளசனீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். சனி தோஷத்தால் பாதித்த நளன் இங்குவந்து சனீஸ்வரனை வழிப்பட்டு, பின் இவரின் அறிவுரைபடியே திருநள்ளாறு சென்றதாக வரலாறு கூறுகிறது. திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. குத்தாலம் என்ற இடத்திலேயே இந்த கோவில் அமைந்துள்ளது.
2. திருத்துருத்தி உக்கதவேதீஸ்வரர். (தற்காலபெயர்-குத்தாலம்)
திருஞானசம்மந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாட பெற்றதலமாகும். சுந்தரரின் நோய் அக்கோவில் குளத்தில் நீராடி நீங்கப்பெற்றதாம்.
1000 வருடங்களுக்கு பழமையான இந்த கோவில் சோழமன்னர்களால் புனரமைப்பு செய்யப்பட்டது. உத்தாலமரம் தலவிருட்சமாகும். உத்தாலம் என்பது மருவி குத்தாலம் ஆனது.
3. திருவேள்விக்குடி.
திருஞானசம்மந்தர், சுந்தரர் அவர்களால் பாடபெற்ற தலம். பரிமளசுகந்தநாயகி சமேத கல்யாணசுந்தரேஸ்வரர். குத்தாலத்தில் இருந்து 2.கி.மீ. தொலைவில் உள்ளது.
கோவில் எதிரே உள்ள மிகரம்யமான குளம்.
4.திருஎதிர்கொள்பாடி.
மலர்குழல்நாயகி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம். சுந்தரரால் பாடபெற்ற தலம்.
திருவேள்வக்குடியில் இருந்து 4.கி.மீ.தொலைவில்உள்ளது.
பெயர்காரணம்.
பரதமுனிவருக்கு மகளாக வளர்ந்த பார்வதி, திருமணபருவத்தை அடைந்த உடன் மகேசனை நினைத்து தியானிக்க தொடங்கினார். திருமணம் செய்துகொள்வதர்காக வந்த ஈசனை பரதமுனிவர் எதிர்கொண்டு அழைத்ததால் எதிர்கொள்பாடி என்ற பெயர் பெற்றது. திருமணஞ்சேரியில் இருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள இக்கோவிலை பலரும் அறியவில்லை. மேல திருமணஞ்சேரி என்றும் அழைக்கப்படுகிறது. இறைவனுக்கு விளக்கேற்ற எண்ணெய் கூட இல்லாத நிலையில் இக்கோவில் உள்ளது.
5.திருமணஞ்சேரி.
திருஞானசம்மந்தர், அப்பரால் பாடப்பெற்ற தலம். கோகிலாம்பிகை சமேத உத்வாகநாதர் திருக்கோவில்.
கீழதிருமணஞ்சேரி என்று அழைக்கப்படுகிறது.
கல்யாணசுந்தரராகவந்து கோகிலாம்பிகையை திருமணம்செய்து கொண்ட இடம்.
திருமணதடை நீங்க இறைவனை வேண்டி பக்தர்கள் குவிகின்றனர்.
திருவேள்விகுடியில் இருந்து 4கி.மீ. தொலைவில் உள்ளது.
6. பந்தநல்லூர்.
ஞானசம்மந்தர் மற்றும் அப்பரால் பாடபெற்ற தலம்.
திருமணஞ்சேரியில் இருந்து 9கி.மீ. தொலைவில் உள்ளது.
தலவரலாறு.
பார்வதி பந்து விளையாட்டில் மும்மரமாக இருந்ததால் சூரியன் மறைய காலதாமதமாக்கினார். முனிவர்கள் மாலை சூரியவந்தனம் செய்ய கால தாமதம் ஏற்பட்டது. ஈசனிடம் சென்று முறையிட்டனர். ஈசன் அழைத்தும் உலகநாயகி விளையாட்டில் ஆர்வமாக இருந்ததால். பூமியில் பசுவாக பிறக்குமாறு கூறுகிறார். புற்றின்உள் இருக்கும் லிங்கத்தின் மீது பசு பால்சுரந்தஉடன், இருவரும் இறைஉருவை பெற்றனர்.
பந்தணைநல்லூர் என்றும் அழைக்கப்படுகிறது.
இக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.