விழுப்புரம் மாவட்டம் - பாடல் பெற்ற தலங்கள்.(20.7.2021)
நானும் என் கணவரும், திருவாண்டார்கோவில், திருமுண்டீஸ்வரம், திருஇடையாறு, திருவெண்ணைநல்லூர் இந்த நான்கு பாடல் பெற்ற தலங்களுக்கு சென்று வழிப்பட்டோம்.
1. திருவாண்டார் கோவில்.
புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், நெடுஞ்சாலையின் வலது புறத்தில், நடக்கும் தூரத்திலேயே இந்த கோவில் அமைந்துள்ளது. இறைவன் பஞ்சநதீஸ்வரர், வடுகீஸ்வரர், வடுகூர்நாதர், வடுகநாதர் என்றும், அம்பிகை வடுவகிறர்கண்ணி, திரிபுர சுந்தரி என்ற நாமத்தை கொண்டு நம்மை அருள்பாலிக்கின்றனர். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும். இந்த கோவில் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் இயங்குகிறது. அருணகிநாதரால் ஒரு திருபுகழ் பாடல் எமுதப்பட்ட இடமும் ஆகும்.
2. திருமுண்டீச்சரம்.
இந்த பாடல் பெற்ற தலமும் திருவெண்ணைநல்லூரை தொடர்ந்து, அரசூர் செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த தலம் தோன்றியதற்கான வரலாறு, படக்காட்சியாக கோவிலின் உட்பகுதியில் உள்ளது. சொக்கலிங்கம் என்ற அரசர் ஒரு அழகிய தாமரை பூவை குளத்தில் கண்டதாகவும், அதை கொய்ய வீரனை அனுப்புகையில், அந்த மலர் கைக்கு அகப்படாமல் அந்த வீரனை அலைக்கழித்த காரணத்தால், அரசர் மலர் மீது அம்பெய்துகிறார். உடனே பூவின் மேல் ஒரு லிங்கம் தோன்றியது மடடும் அல்லாமல், குளத்து நீர் சென்னிறமாக மாறுகிறது. அந்த குளக்கரையிலேயே மன்னன் சிவாலயம் எழுப்புகிறார். செல்வாம்பிகை சமேத ஸ்ரீ முண்டீசர் இக் கோவிலில் வீற்றிருந்து நம்மை அருள்பாலிக்கிறார். திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமாகும் இது. இந்த தேவார பாடல், பத்து பத்தியின் முடிவிலும், “திருமுண்டீசரத்து மேய சிவலோகன்காண் அவனென் சிந்தையானே.” என்று முடிக்கிறார் அதனால் சிவலோகநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்..

3. திருஇடையாறு.
இந்த தலமும் இதே வழித்தடத்தை தொடந்து அமைந்துள்ளது. கோவிலின் சுற்றுபகுதி நல்ல பசுமையாக இயற்கை எழிலுடன் காணப்படுகிறது. சுந்தரமூர்த்தி நாயன்மாரால் பாடல் பெற்றதலமாகும்;. “முந்தை ஊர் முதுகுன்றம்” என்று தொடங்கும் இந்த திருப்பதிகத்தில் சிவபெருமான் குடிகொண்டிருக்கும் பல ஊர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது.

4. திருவெண்ணைநல்லூர்.
இறைவன்- கிருபாபுரீஸ்வரர். இறைவி-வேற்கண்ணியம்மை, (எ) மங்களாம்பிகை. கைலாயத்தில் சிறந்த தொண்டனாக மலர் கொண்டு இறைவனை பூஜித்துவந்த நிலையில் சுந்தரர் பார்வதி தேவியின் பணி பெண்ணை பார்த்து மயங்கியமைக்காக, பூமியில் பிறந்து இல்லாழ்கையில் ஈடுபட இறைவனால் கட்டளையிடப்படுகிறார். அப்பொழுது சுந்தரர் இறைவனிடம் நான் மானுடபிறவியில் மயங்கும் பொழுது என்னை ஆட்கொள்ள வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறார். அதனால் சுந்தரரின் திருமணதருவாயில் வந்து “நீ என் அடிமை” என்று வழக்கு தொடுத்து சுந்தரரை கோயில் வாசல் வரை அழைத்து வந்து கைலாய கோலத்தில் காட்சி தருகிறார். தன் மேல் பாடல் இயற்றி பக்தி கொள்ளுமாறு பணிக்கிறார். நான் எவ்வாறு பாடவேன் என்று கேட்டதற்;கு, “நீ என் அடிமை என்று”, நான் உன் மேல் வழக்கு தொடுத்தமையால் நீ “உனக்கு என்ன பித்தா” என்று கேட்டாய்யல்லவா அதனால் “பித்தா” என்று பாடலை தொடங்குமாறு சிவ பெருமான் பணிக்கிறார். (பித்தா பிறை சூடி-தேவாரம்) மகிஷனை வதம் செய்ய பார்வதி கோர உருவம் எடுத்து, இந்த உருவம் மறைய வெண்ணைகோட்டைகட்டி அதில் தவம் செய்தமையால் இந்த ஊர் திருவெண்ணைநல்லூர் எனவும் இறைவி மங்களாம்பிகை எனவும் அழைக்கப்படுகின்றனர். முருகபெருமான் மயில் மீது நடனமாடி அருணகிரிநாதருக்கு காட்சி கொடுத்தபின் திருபுகழ் ஒன்றும் இந்த தலத்திலேயே உருவாகியுள்ளது. சடையப்ப வள்ளல் வாழ்ந்து மறைந்த தலம், மெய்கண்டார் முக்கி அடைந்த தலம் என்று பல சிறப்களை கொண்டது இந்த திருவெண்ணைநல்லூர். தற்சமயம் புணரமைப்பு பணி நடக்கிறபடியால், குடமுழுக்கு முடிந்த பிறகு சென்று அனைத்து தெய்வங்களையும் தரிசனம் செய்யுங்கள். கிருபாபுரீஸ்வரர் சன்னதி தவிற மற்ற இடங்கள் தரிசிக்க அனுமதி இல்லை. ஆடி மாதம் என்பதால் மங்களாம்பிகை தரிசனமும் எங்களுக்கு கிடைத்தது.
