குருந்தமலை முருகன், பாலமலை ரங்கநாதர். (தரிசன நாள் 10.12.2021)
கோயமுத்தூரில் இருந்து 28கி.மீ. தொலைவில், காரமடையில் இருந்து கிணத்துக்கிடவு செல்லும் பாதையில் 5கி.மி தொலைவில் குருந்த மலை அமைந்துள்ளது. பழனி மலை முருகன் போலவே மேற்கு திசை நோக்கி பால முருகனாக காட்சி தருகிறார். 125 படிகள் கொண்ட சிறிய மலைதான்.
தல வரலாறு.
கொங்கு நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வணிகர் குலத்தவர்கள் மிளகு, கிராம்பு, ஏலக்காய் போன்ற பொருட்களை சேரநாட்டில் இருந்து வாங்கி, குருந்த மலைவழியாக சென்று, மைசூரில் விற்பனை செய்து வந்தனர். குருந்த மலையில் சிறுவன் ஒருவன் வியாபாரிகளிடம் இந்த மூட்டையில் என்ன இருக்கிறது? என்று கேட்க, வியாபாரிகள் தவிடு உள்ளது என்று சொல்கின்றனர். மறுநாள் மூட்டையை தூக்கும் போது கனம் இல்லாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே மூட்டையை பிரித்து பார்த்தால் தவிடாக இருந்தது. அதிர்ந்த வியாபாரிகள் குழந்தை வடிவில் வந்தது வேலாயுத கடவுள் என்பதை உனர்ந்து குழந்தை வேலாயுதனுக்கு ஒரு கோவில் கட்டினர் என்று, இக்கோவில் வரலாற்றை படகாட்சியாக கோவில் சுவற்றில் வரைந்துள்ளனர்.
பாலமலை ரங்கநாதர்.
குருந்த மலையில் இருந்து பால மலைக்கு செல்லும் வழிதடத்தை தவிர்த்து, நாங்கள் காரமடைக்கு வந்து எங்களுடைய காலை உணவை முடித்துக்கொண்டு பெரியநாயகன் பாளையம் வழியாக பாலமலையை அடைந்தோம்;. காரமடை ரெங்கநாதரை நாங்கள் ஏற்கனவே தரிசித்து இருந்ததால் பாலமலைக்கு முன்னுரிமை குடுத்தோம். பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து 11கி.மீ. தொலைவு இருந்தது. கோவனூர் என்ற இடத்தை கடந்தவுடன், எந்த அரவம் இல்லாமல் இருந்தது. நாங்கள் இதே போன்று வாகன ஓட்டம், மனித நடமாட்டம் இல்லாத பல இடங்களுக்கு சென்றாலும் இந்த இடம் மலை பாதை என்று தெரிந்தவுடன், ஒரு வித அச்சத்தை எற்படுத்தியது. நாங்கள் மலை பாதையில் கார்
ஓட்டிய அனுபவமும் கிடையாது. என கணவர் எனக்கு தைரியம்கொடுத்து இரண்டு கொண்டை ஊசி வளைவுகளை கடந்து சென்றார்;. மூன்றாவது வளைவு கடினமாக இருந்ததை பார்த்து எங்களுக்கு பயம் ஏற்பட்டது. இதையும் கடந்து சென்றவுடன் சாலை சற்று அகலமாக இருந்த இடத்தில் காரை நிறுத்திவிட்டு நடந்தோம். 500 மீட்டர் நடந்திருப்போம், எதிரில்Forest Police இருவர் இரண்டு சக்கர வாகனத்தில் வந்தனர். எங்களை நாங்கள் எங்கு செல்கிறீர்கள் என்று விசாரித்து விட்டு “இந்த வயதான காலத்தில் யானை அடித்து போட்டால் யார் சார் பார்கறது?” என்று கடிந்து கொண்டனர். நாங்கள் உடனே திரும்ப முயன்றோம். ரங்கநாதரை தரிசனம் செய்து விட்டு வந்த ஒரு அரசு அலுவலக வாகன பயணியர், எங்களை எங்களுடைய கார் வரை கூட்டி வந்தனர். நாங்கள் ரங்கநாதரை தரிசனம் செய்யாமலேயே திரும்பினோம். இந்த மலையில் மொத்தம் 6 கொண்டை ஊசி வளைவு இருக்கிறது, நாங்கள் 3 வளைவு கடந்து விட்டோம் என்பதையும், கோவனூரில் இருந்து தனியார் Jeep வசதி உள்ளது என்பதையும் பிறகு அறிந்துக்கொண்டோம்.