ஓம்காரேஸ்வரர் மலைக் கோவில்( வழிபட்ட நாள்-31.8.2024)
அமைவிடம்.
பெங்களுர், ராஜராஜேஸ்வரி நகரில், கடல் மட்டத்திலிருந்து, 2800 அடி உயரத்தில் “துவாதச (12)ஜோதிர்லிங்க ஆலயம்” மற்றும், “மச்சநாராயண ஆலயம்”; என்ற இரண்டு கோவில்கள் அமைந்துள்ளது.
வாய்ப்பு
எங்களுடைய மகனின் திருமணநாள் வழிபாட்டிற்காக, எங்களின் மருமகளால் பரிந்துரைக்கப்பட்ட கோவில் இது.
வரலாறு.
சத்குரு ஸ்ரீசிவபுரி மஹாஸ்வாமி அவர்களால் நிறுவப்பட்டதே இந்த கோவில். 2002 ஆம் ஆண்டு கட்டுமானப்பணி தொடங்கியது. 2007 ஆம் ஆண்டு இந்த சுவாமிகள் சமாதி நிலை அடைந்தார். இதனை தொடர்ந்து, இவரின் மாணவர் மதுசூதனாந்தபுரி அவர்களால், 2011 ஆம் ஆண்டு, பிப்ரவரி 16 தேதி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
கோவில் அமைப்பு.
நர்மதை நதிகரையில் உள்ள ஜோதிர்லிங்க ஓம்காரேஷ்வரர் 6அடி உயரத்தில் லிங்க வடிவமாக மையமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். மற்ற 11 ஜோதிர்லிங்கங்கள் இந்த ஓம்காரேஷ்வரரை சுற்றி தனித்தனி சன்னதிகளாக அமைத்துள்ளனர். ஓம்காரேஷ்வரர் ஸ்படிகத்தால்லான ஸ்ரீயந்ரம் மீதும், பிற லிங்கங்கள், பஞ்சலோக ஸ்ரீயந்திரத்தின் மீதும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுணர், மற்றும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமியின் கோபுரங்கள் தென்னிந்திய பாணியிலும். ஏனைய சன்னதிகளின் விமானம் வடஇந்திய பாணியிலும் அமைக்கப்பட்டுள்ளது.
நர்மதை ஆற்றின் பாணலிங்கம்.
நர்மதை ஆற்றில் இருக்கும் கல், பாணலிங்கம் என்று அழைக்கப்படுகிறது. 1008 நர்மதேஸ்வர பாணலிங்கம் ஒவ்வொரு ஜோதிர்லிங்க சிவன் பிரதிஷ்டைக்கு அடியிலும், நர்மதை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும், ஓம்காரேஸ்வரர் ஜோதிர்லிங்கத்திற்கு மட்டும் 2008 நர்மதேஸ்வர பாணலிங்கத்தின் மீது பிரதிஷ்டை செய்துள்ளனர். நாங்கள் கடந்த மார்ச் மாதம் (2004ல்) தான் நர்மதா பரிக்ரமா செய்தோம். இந்த பரிக்ரமா காலங்களில் நர்மதேஷ்வர பாணலிங்கத்தை வைத்து, நர்மதாபுரம்,(இரண்டுமுறை) மஹராஜ்பூர், பரூஜ், ப்ரகாசா, நீமாவர், பார்வனி, ஓம்கார், ஜபல்பூர், மகேஷ்வர், அமர்கண்டக், போன்ற இடங்களின் நர்மதையாற்று படித்துறைகளில் பூஜை செய்த பாக்கியம் பெற்றோம்.
ஜோதிர்லிங்கங்களை சென்று தரிசனம் செய்ய முடியாதவர்கள் இங்கு சென்று வழிபட்டு மனநிறைவடையலாம். நாங்கள் ஜோதிலிங்க தரிசனம் வேண்டி இறைவனை பிரார்தனை செய்தோம்.
மச்சநாராயணர் ஆலையம்.
ஸ்ரீமன் நாராயணனின் முதல் அவதாரமான மச்சாவதார கோவில் ஒன்று இங்கு உள்ளது. நாங்கள் பெருமாளையும் வழிபட்டு திரும்பினோம்.
இக்கோவிலுக்கு எதிரில் அனைத்து மதங்களின் குருமார்களும், அந்த மதங்களின் புனித நூல்களும் உருவங்களாக அமைத்துள்ளனர்.
அருகில் இருந்த ராஜராஜேஸ்வரி கோவிலையும் வழிபட்டு திரும்பினோம்.
No comments:
Post a Comment