விட்டலாபுரம். (தரிசனம்- 20.9.2024).
இப்பெயர் கொண்டு தழிழ்நாட்டில் இரண்டு ஊர்கள் உள்ளன. இந்த இரண்டு இடத்திலுமே பாண்டுரங்கன் கோவில் அமைந்துள்ளது.
1. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் 11 கி.மீ. தொலைவில் உள்ளது.
2. சென்னை- பாண்டிச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை வழித்தடத்தில் கல்பாக்கத்திற்கு அருகில் உள்ளது.
வாய்ப்பு.
எங்கள் குலதெய்வம் வெங்கடேச பெருமாளின் உரியடி உற்சவத்திற்;கு சென்ற இடத்தில், எங்கள் உறவினர் ஒருவர் இக்கோவில்பற்றி கூறினார். பாண்டிச்சேரியில் இருந்து சென்னை வருகைக்கு இந்தவழிதடத்தை பயன்படுத்தி, புரட்டாசி புண்ணிய மாதத்தில் இந்த பாண்டுரங்கனை தரிசிக்கும் பாக்கியம் பெற்றோம்.
வரலாறு
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பண்டரிபூர் போன்ற அமைப்பில் உள்ளது இந்த கோவில். விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயரின் அரச பிரதிநிதி ஒருவர் இந்த கோவிலை 16 ஆம் நூற்றாண்டில் கட்டியுள்ளார். அர்த மண்டபம், முக மண்டபம், மகாமண்டபம் என்று மிக சிறப்பாக இக்கோவில் அமைந்துள்ளது.
கோவில் அமைப்பு.
பிரேமிக் விட்டல் தனது இருகரங்களையும் இடுப்பில் வைத்தபடி ருக்மிணி சத்யபாமாவுடன் காட்சி தருகிறார். தந்தான லெஷ்மி தாயாருக்கு தனி சன்னதியுள்ளது. கொடிமரம், பலிபீடம், கருடன் சன்னதி என்று மூன்றும் தொடர்ந்து அமைந்துள்ளது. முதல் சுற்றில் வரதராஜபெருமாள், ஸ்ரீநிவாசபெருமாள், இவர்களுக்கு தனி சன்னதிகளும், இதை தொடந்து ராமானுஜர் மற்றும், விஷ்வக்ஸேனருக்கு ஒரு சன்னதி என்று, தொடர்ந்து மூன்று சன்னதிகள் அமைந்துள்ளது. கோவிலுக்கு எதிரில் ஆஞ்சநேயர் சன்னதி ஒன்றும் அமைத்துள்ளனர்.
மிக பாழடைந்துதிருந்த கோவில், திரு.கிருஷ்ணபிரேமி மற்றும் திரு. முரளிதரசுவாமிகள் இவர்களின் பெரும் முயற்சியாலும் புத்துயிர் பெற்று விளங்குகிறது.