நெய்வணை, திருவாமாத்தூர், திருநாவலூர்.
எங்களின் 274 பாடல் பெற்ற தல யாத்திரையின் தொடர்ச்சியாக, (5.8.21) அன்று மீண்டும் எங்கள் தலயாத்திரையை தொடர்ந்தோம். திருநெய்வணை, திருநாவலூர், திருவாமாத்தூர், அரகண்டநல்லூர், இந்த நான்கு திருக்கோவிலுக்கு செல்வது என்று தொடங்கிய புனித பயணத்தில் 3 இடங்களுக்கே சென்று, இறைவனை வழிபட முடிந்தது.
1.நெய்வணை
விழுப்புரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், உளுந்தூர்பேட்டை அடுத்து சேலம் செல்லும் பாதையில், வலது புறம் நெய்வணை செல்வதற்காண சாலை பிரிகிறது. நாங்கள் கூகுள் உதவியுடன் தான் சென்றோம். இறைவன் சொர்ணகடேஸ்வரர். இறைவி நீலமலர்கண்ணி (எ) பிரகன்நாயகி. திருஞானசம்மந்தரால் பாடப்பெற்ற தலம். சிவன் சுயம்புமூர்த்தி;. (நல்வெண்ணெய் விழுது பெய்தாடுதிர் -பதிகம்). வள்ளலார் சுவாமிகளாலும் பாடப்பெற்ற தலமாகும்.
2.திருநாவலூர்.
நெய்வணையில் இருந்து, ரிஷிவந்தியம் -நெமிலி சாலை வழியாக கெடிலம் ஆற்று பாலம் அருகில் சென்று விழுப்பரம்- திருச்சி நெடுஞ்சாலை எதிர்புறம் சென்றால் திருநாவலூர் கோவிலை அடைந்து விடலாம். மணோன்மணி அம்பாள் உடனுறை ஸ்ரீபக்தஜனேஸ்வரர் ஆலயத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு தனி சன்னதியே ஒன்று அமைந்துள்ளது. சுந்தரமூர்த்திநாயனார் பதிகம் பாடிய கோவிலும், அவதரித்ததலம் என்ற பெருமையும் கொண்டது, திருநாவலூர். வரதராஜபெருமாளுக்கு தனி சன்னதியே உள்ளது. பெருமாள், அம்மன் சன்னதி இரண்டும் சோலை நடுவில் உள்ளது போல் சன்னதி சுற்றி அடர்ந்த மரங்கள் உள்ளன.
3;. திருவாமாத்தூர்.
திருநாவலூரில் இருந்து அரகண்டநல்லூரை விட திருவாமாத்தூர் அருகில் இருந்ததால் கோவில் நடை மூடுவதற்குள் முத்தாம்பிகை உடனுறை அபிராமேஸ்வரை தரிசிக்க முடிவுசெய்து திருவாமாத்தூர் சென்றோம். விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்பரம் - திண்டிவனம் செல்லும் வழிதடத்தில் அமைந்துள்ளது. ராமர் வழிபட்டதலம்,ஆவினங்கள் (பசு) ஒன்றுகூடி இறைவனை வேண்டி, தன்னை தற்காத்துக்கொள்ள கொம்புகளை வரமாக பெற்ற இடம்,பிருங்கி முனிவர் அம்பிகையை வேண்டி சாபவிமோசனம் பெற்ற தலம். அம்பிகைக்கு தனி சன்னதி இல்லாமல், கோவிலுக்கு எதிரே தனி கோவில், என்று பல சிறப்புகளை பெற்றது திருவாமாத்தூர். திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திநாயனார். இவர்களால் மட்டும் அல்லாமல் இரட்டை புலவர்கள், அருணகிரிநாதர், வள்ளலார், மகான் தண்டபாணி சுவாமிகள் என்ற போற்றதக்க பலரும் அழகியநாயகரை பாடியுள்ளனர்.