நிஜ டோலக்பூர்
என்னுடைய அப்பா அஞ்சல் அதிகாரியாக பணியாற்றிய பல ஊர்களில், நான் நிஜ டோலக்பூர் என்று சித்தரிக்கும் செங்கிப்பட்டி என்ற டி.பி.சானிடோரியம் பற்றியதே இந்த blog. டோலக்பூர் தெரியாதவர்கள் குழந்தைகளிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளவும். இந்த ஊர் அவ்வளவு ரம்யமாக இருக்கம் பாரப்பதற்க்கு. ஏனென்றால் மக்கள் தொகை மிகவும் குறைவு. காச நோய் மருத்துவமணையை அடிப்படையாக கொண்டதே இந்த ஊர். மருத்துவமனையே ஒரு சிறிய ஊர் போன்று தோற்றம் அளிக்கும். அலுவலக முகப்பில் நடுவில் காந்தி சிலையும், இரண்டுபக்கமும் நீரூற்று அலங்கரிக்கும். சிறப்பு வார்டு என்பதை ஒரு அழகான வீடு போன்றே உருவாக்கி இருப்பார்கள். ஒவ்வொரு வீட்டிற்க்கும் குறைந்தது பத்தடியாவது இடைவெளி இருக்கும். நோயாளியின் உதவியாளர்கள் சமைத்து சாப்பிட தனி சமையல் அறை, ஒரு சோலையின் இடையில் விடுமுறை ரிசார்ட் போன்று கட்டியிருப்பார்கள். மருத்துவனையில் கலையரங்கம், உள்திரையரங்கம், , விளையாட்டு மைதானம் என்று கப்பலுக்குள் இருப்பது போன்று அனைத்து வசதிகளும் அமைத்து இருந்தது இந்த மருத்துவமனையில். நான் தினமும் பள்ளி முடிந்த உடன் மருத்துவமணையை ஒரு சுற்ற சுற்றி வந்த பிறகே வீடு திரும்புவேன். எப்படி இருக்கும் என்றால் திட்டமிட்ட நகரம் என்று சொல்வார்களே (நெய்வேலி,சண்டிகர்) போன்று திட்ட மிட்ட கிராமம். மருத்துவர்கள், செவிலியர்கள், இதர பணியாளர்கள் என்று தனிதனியாக அழகான குடியிருப்பு கட்டியிருப்பார்கள். இதன் இடையில் தபால் அலுவலகத்துடன் கூடிய எங்களின் வீடும் அமைந்து இருந்தது. வீட்டைச்சுற்றி மனித,வாகன அரவமே இல்லாமல் மிக அமைதியாக இருந்தது நாங்கள் இருந்த வீடு; நல்ல காற்றோத்துடன் கூடிய மிக அருமையான வீடு. வாஷ் பேசின், சமையல் அறையில் சிங், அனைத்து இடத்திலும் தண்ணீருக்கு குழாய் என்று நாங்கள் மூன்று ஆண்டுகள் சுகமாக இருந்தோம். ஊரில் எங்கும் குப்பையே இருக்காது. அதுமட்டுமல்ல நாய், பன்றி, கோழி என்று எதுவுமே இருக்காது. இவைகள் மூலம் காச நோய் பரவும் என்பதால் இந்த மருத்துவமனையில் இவைகளை உடனே அகற்றுவதற்காக பணியாளர்கள் அமர்த்தப்பட்டிருந்தார்கள். எங்களை தவிற மருத்துவமனைக்கு தொடர்பில்லாத (நேரடியாக) இரண்டு குடும்பம் இருந்தது. இருவருமே ஹோட்டல் வைத்து இருந்தவர்கள் தான். (சைவம் மற்றம் அசைவம்). நோய் அச்சம் மற்றும் வசதிஇல்லாத சூழல் அவைகளை மட்டும் கருத்தில்கொள்ளாமல் சுத்தமான பராமரிப்பு இயற்க்கை சூழல் நிறைந்த இந்த இடத்தில் மிக இளவயதில் வாழ சந்தரப்;பம் அளித்த என்தந்தைக்கு மிக்க நன்றி. எட்டு வயதில் வாழ்ந்த ஊர் 45 வருடம் சென்ற பிறகும் என் மனதில் மிக பசுமையாக நிறைந்துள்ளது.