வடஸ்ரீரங்கம் என்ற தேவதானம். (தரிசனநாள்-18.2.2023).
வட ஸ்ரீரங்கம் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில், பெருமாள் ரங்கநாதர் என்ற பெயரிலும், தாயார் ரங்கநாயகி என்ற பெயரிலும் அருள்பாலிக்கின்றனர். வாட்ஸ்ஆப் செயலியில் வந்த பதிவின் மூலம் இந்த கோவிலை அறிந்து கொண்டேன்.
அமைவிடம்.
சென்னை அருகே உள்ள பொன்னேரி என்ற ஊரில் இருந்து, ஏழு கி;.மீ. தொலைவில் உள்ளது. பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து, செல்ல ஆட்டோ வசதி மட்டுமே உள்ளது. காரில் சென்றால், திருவொற்றியூர் ஹை ரோடில் செல்ல வேண்டும்.
தலபுராணம்.
தேவர்களால் தானம் செய்யபட்ட இடம் என்பதால் தேவதானம் என்று அழைக்கப்படுகிறது. சாளுக்கிய மன்னன் தென்னிந்தியாவில் படை எடுத்த போது. திருச்சியில் காவிரிக்கரையோரம் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதரை கண்டு சொக்கி மயங்கி போனான். எங்கு சென்றாலும் ரங்கநாதரின் அழகுமட்டும் மனதை விட்டு நீங்காதிருந்தது. பொன்னேரிவழியாக செல்லும் போது இந்த இடமும், ஸ்ரீரங்கம் போன்று எங்கும் நெல் நிறைந்து பசுமையாகவே காட்சியளித்தது. அந்த இடத்தில் ஒரு விவசாயி நெல்மணிகளை மரக்காலால் அளந்து கொண்டிருந்தார், மன்னன் அருகில் செல்லவும் விவசாயியை காணவில்லை. பார்தால் நெல் அளக்கும் மரக்காலை தலைக்கு வைத்துகொண்டு அந்த விவசாயி உறங்கிவிட்டார். மன்னன் அருகில் சென்று பார்தால் ஸ்ரீரெங்கம் ரங்கநாதர் தலையில் மரக்காலை வைத்து கொண்டு சயனித்திருப்பது போன்ற காட்சியை கண்டவுடன், இந்த இடத்திலேயே கோவில் கட்ட முடிவு செய்தார் மன்னர்.
சிலைசெய்ய நேபாளநாட்டில் கிடைத்த ஒரு பெரிய கல்லை கொண்டுவரும்பொழுது அந்த கல் கங்கைநீரில் விழுந்து மிதந்தது, இந்த அதிசயத்தை கண்ட சாளுக்கிய மன்னன், அந்த கல் சாளக்கிராமம் என்பதை அறிந்து கொண்டார். சாளக்கிராமகல்லில் 1000 வருடங்களுக்கு முன்பு, 18 அடி நிளத்தில் ரங்கநாதர் செதுக்கப்பட்டார். என்பதே இக்கோவிலின் புராணம்.