அருள்மிகு வடிவுடையாம்பிகை சமேத ஆதிபுரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அபிஷேக பிரியரான சிவனுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கார்திகை பௌர்ணமியன்று தைலகாப்பு சாற்றப்படுகிறது.
கோவில் சிறப்பு.
1. நாவுக்கரசர், சுந்தரர், ஞானசம்பந்தர் என்ற மூவராலும் பாட பெற்ற தலம்.
2.கலிய நாயனாரின் அவதார தலம். கலிய நாயனாருக்கு சிறியதாக ஒரு சிலை, ஆதிசிவன் உள்பிராகாரத்தில் அமைந்துள்ளது.
3.பட்டினத்தார் பல முறை தரிசனம் செய்ததும், முக்தியடைந்ததும் இந்த திருவொற்றியூரில் தான்.
4.ஆதிபுரீஸ்வரர், தியாகராஐர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், ராமநாதசுவாமி, திருவொற்றீஸ்வரர், நந்தவனேஸ்வரர், ஜம்புலிங்கேஸ்வரர், காளத்தீஸ்வரர், ஆகாசலிங்கர், அண்ணாமலையார், ஜெகந்நாதர், குழந்தையீஸ்வரன். என்று சிவபெருமானை பல பெயர்களுடன் தனி சன்னதிகளில் தரிசிக்கமுடிகிறது.
5. தியாகராஜர், லிங்க வடிவமாக அல்லாமல் திருவாரூர் தியாகராஜர் போன்றே உற்சவ முர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
6. சுந்தரர் சங்கிலி நாச்சியாரை திருமணம் செய்துகொண்ட தலம்.
திரிபுரசுந்தரி என்ற வடிவுடையம்மன்.
பெயருக்கேற்றார் போல் அம்மன் தரிசனம் அற்புதமாக இருந்தது.
“அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம் துதிசய ஆனன சுந்தரவல்லி துணைஇரதி பதிசயமானது அபசயமாக முன் பார்தவர்தம் மதிசயமாகவன்றோ வாம பாகத்தை வவ்வியதே.”அமிராமி பட்டரின் இந்த பாடல் என்நினைவில் நிறுத்தியது. (மன்மதனை எரித்தவனையே விழியால் வெற்றிகொண்டாள் என்கிற பொருள்பட அபிராமிபட்டர் எழுதியுள்ளார்.)
27 நட்சத்திரங்கள்.
27 நட்சத்திரங்களும் சிவபெருமானை வழிபட்டு, ஒவ்வொனறும் ஒரு சிவலிங்கமாக மாறி முக்தி பெற்று பக்தர்களுக்கு அருள் வழங்குகின்றன. தெற்கு வெளிப்பிரகாரத்தில் 27 நட்சத்திரங்கள் வரிசையாக உள்ளன்.
வட்டப்பாறையம்மன்.
காளியம்மன் வட்டப்பாறையம்மன் என்ற பெயரில் வீற்றிருக்கிறாள். கம்பர் இரவு நேரத்தில் ராமாயணம் எழுதியதாகவும், அதற்கு இந்த வட்டப்பாறையம்மன் தீ பந்தம் பிடித்தார் என்றும் வரலாறு கூறுகிறது.
பெருமாள் கோவில்.
கல்யாணவரதராஜபெருமாள் கோவில் சிவன் கோவிலில் இருந்து 2 கி;மீ. தொலைவில் உள்ளது. கோவிலில் திருப்பணி நடைபெறுகிறது.
பட்டினத்தார் கோவில்.
சிவன் கோவிலில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் உள்ளது. இறுதிகாலத்தில் திருவொற்றியூர் வந்து, குழந்தைகளுடன் சித்து விளையாட்டு விளையாடி தன்னை மண் மீது மூடச்செய்து மறைந்து சமாதியானார் என்கிறார்கள். அவர் மறைந்த இடத்தில் லிங்கம் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.