கும்பகோணத்தை அடுத்துள்ள பண்டாரவாடை என்ற ஊரில் அமைந்துள்ளது இந்த ஆலயம். சாதாரணமாக, கோவில்கள் அனைத்தும் எதாவது ஒரு சிறப்பை கொண்டிருக்கும். ஆனால் இந்த தலத்தில் அமைந்துள்ள அனைத்து இறைவனும் ஒவ்வொரு சிறப்பை கொண்டு நமக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கின்றனர். அடிப்படையில் இது ஒரு சிவாலயம். நான்கு வேதங்களையும் அசுரர்கள் அபகரித்து சென்றுவிடுவதால் பிரம்மா, காக்கும் தொழிலை கொண்ட திருமாலிடம் முறையிடுகிறார். திருமால், அந்த அசுரர்களை அழிப்பதற்காக மச்சாவதாரம்( மீன் வடிவம்) எடுக்கிறார். வேதங்களை கவர்ந்துகொண்டு சென்ற அசுரர்கள் பூமிக்கடியில் சென்றுவிடுவதால், அவர்களை எளிதில் சென்றடைய நீருக்கடியில் செல்ல மச்சஅவதாரம் எடுத்து அசுரர்களை அழித்து, வேதங்களை பிரம்மாவிடம் ஒப்படைக்கிறார்.அழிக்கும் தொழிலை கொண்ட சிவபெருமானின் பணியை திருமால் செய்ய நேர்ந்ததால், அவருக்கு உண்டான தோஷத்தை நிவர்த்தி செய்ய சிவபெருமானை நோக்கி தவம் செய்ததால், சிவலிங்கத்துடன் ஒட்டினால் போன்று ஒரு மீன் உள்ளது. சிவனும் திருமாலும் ஒருசேர அமைந்துள்ளதால், இத்தலத்தில் பெருமாள் கோவில் போன்று சொர்கவாசல் திறந்து, வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மச்சாவதாரம் எடுத்து அசுரனை வதைசெய்யும் காலத்தில், உலகை காக்க, முருகன், இவரிடமிருந்து சங்கு மற்றும் சக்கரத்தை பெற்றுக்கொண்டதால், இத்தலத்தில் முருகப்பொருமான் சங்கு சக்கரத்துடன் வள்ளி தெய்வானை ஒரு சேர காட்சி தருகிறார். திருப்புகழில் உள்ள அனைத்து பாடல்களும் பெருமாளே என்றே முடியும், முருகப்பெருமான் சில காலங்கள் பெருமாளாக, காக்கும் பணியாற்றியமையால்தான் திருப்புகழில் பெருமாளே என்று முடிவடைகிறது என்று அந்த அர்சகர் சொன்ன விளக்கம் மிக பொருத்தமாக உள்ளதை நானும் உணர்ந்தேன். பல ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கொடுத்த விளக்கத்தை காட்டிலும் இந்த அர்சகரின் விளக்கம் மிகப்பொருத்தமாக(apt) இருந்தது.
வேதங்களை அபகரித்து சென்ற நேரத்தில் பூமியில் பிறக்கும் குழந்தைகள் அசுரகுணத்துடன் இருக்கின்றனர். இவர்களுக்கு நல்ல குருவாக இருக்க, தட்சிணாமூர்த்தி வடிவத்தில் இருக்கும் சிவபெருமானின் சன்னதியில் பூதகணங்கள் தட்சிணாமூர்த்தியின் பாதத்தில் இல்லாமல் இறைவனின் சிரசில் பூதகணங்கள் இருப்பது போன்று அமைந்துள்ளது, தட்சிணாமூர்தி சன்னதி.
திருமாலின் முதல் அவதாரமான மச்சாவதாரத்திலேயே அவர் இங்கு வந்து தவம் செய்தமையால் பல சித்தர்கள் ஆதிகாலத்திலேயே, சிவனடியை வேண்டி, இங்கு வந்து தவம் செய்ய ஆரம்பித்தனர். இதற்க்கு அச்சாரம் இட்டார் போல் பாபா சித்தரின் சன்னதியும் இந்த ஆலையத்தில் உள்ளது.(ரஜினிகாந் பாபா பட சித்தர்)
அம்பிகை, காஞ்சி காமாட்சி போன்று காமாட்சியாகவே, ஸ்ரீ சக்கரத்தில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். அம்பிகை, பாலா திரிபுரசுந்தரி போன்று குழந்தையின் மன மகிழ்ச்சியுடன் இருக்கிறாளாம். மகிழ்வுடன் இருப்பதால் நித்திய அலங்கரத்துடன் காட்சி தருகிறாள். 13 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடுகிறார்கள். அம்பிகைக்கு நேரெதிரில் உள்ள காளிக்கும் இவரின் மகிழ்ச்சி தொற்றிகொண்டதால். துர்கை அம்மனும் புன்னகை பூத்த முகத்துடன் இருக்கிறார்.
நான் பார்த்த சிறப்பு இந்த கோவில் அர்சகரும் அம்பிகை போன்றே மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் காணப்பட்டார். அர்சகர் எனக்கு இந்த புராண கதையை கூற ஆசை, ஆனால் வரும் பக்தர்களில் பலரும் 1மணி நேரத்தில் நான் 3 கோவில்கள் முதல் 5 கோவில்கள் வரை பார்க்க வேண்டும் என்று கூறுகின்றனர் என்று சொல்லி, உங்களுக்கு விருப்பமா? என்று கேட்ட பின்னரே, புராணகதையை மிக உற்சாகத்துடன் எங்களுக்கு கூறினார். நானும் என் கணவரும் ஒரு மணி நேரத்திற்க்கு மேல் இந்த ஆலயத்தை வழிபட்டு இன்புற்றோம்.