உதவியால் வந்த பிரச்சனை.

                                          உதவியால் வந்த பிரச்சனை.

    எங்கள் வீட்டில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி வேலை செய்துகொண்டிருந்தார். அவர் ஒரு கண் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். நானும் என்னுடைய இரு சக்கர வாகனத்தில் அழைத்து செல்வதாக உறுதி அளித்து இருந்தேன். அதற்கான நேரம் வந்தது, வீட்டு வேலை முடித்து விட்டு 10 மணிக்கு வாருங்கள், நான் உங்களை மருத்துவமனையில் விட்டுவிட்டு என்னுடைய பணிக்கு செல்கிறேன் என்றேன். சரியான நேரத்திற்;கு வந்தார். கிளம்பி சென்று மருத்துவமணை வாயிலில் வண்டியை நிறுத்தவும் அந்த பெண்மணி மயங்கி சரியவும் சரியாக இருந்தது. எனக்கு வண்டியை பிடிப்பதா அல்லது அந்த பெண்மணியை பிடிப்பதா என்று ஒன்றுமே புரியவில்லை, அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கீழே விழாமல் அவரை பிடித்து விட்டோம். தண்ணீர் தெளித்து குடிக்க நீர் கொடுத்தவுடன், சற்று நேரத்தில் நன்கு சுதாரித்துக்கொண்டார், என்னம்மா? என்று கேட்டதற்க்கு பசி மயக்கம் என்று தெரிந்தது. எனக்கு கோபம் உச்சிக்கு ஏறியது ஏன் என்றால், நான் வீட்டைவிட்டு கிளம்பும்போதே சாப்பிட்டீர்களா? இட்லி, பொதினா சாதம், உருளைகிழங்கு பொரியல் உள்ளது. என்கணவரும் அலுவலகத்துக்கு கிளம்பிவிட்டார் சாப்பாடு அதிகமாகவே உள்ளது. நீங்கள் சாப்பிடுங்கள் என்றேன், அதற்க்கு அந்த பெண்மணி நான் வீட்டிலேயே  சாப்பிட்டுவிட்டுதான், வந்தேன் என்றார். இப்பொழுது உங்களுக்கும் புரிந்து இருக்கும் எனக்கு கோபம் ஏன் உச்சிக்கு ஏறியது என்று. எனக்கு பசியாக உள்ளது என்றார். உடனே நான் அவரை ஓரு இடத்தில் அமர்த்திவிட்டு உணவு வாங்க சென்றேன். காலை 11 மணி என்பதால் டிபன்,சாப்பாடு இரண்டுமே கிடைக்காத நேரம். சற்று அலைந்த பிறகு ஒரு மெஸ்சை கண்டுபிடித்து இந்த அம்மாவை அழைத்து சென்று டிபன் வாங்கி கொடுத்து,  இயல்புக்கு வந்த பிறகு நான் என் பணிக்கு சென்றேன். தேவை இல்லாமல் பணம், நேரம், விரையம் ஆகி பிரச்சனையும் உருவாகியது எனக்கு. உதவி செய்வதற்க்கு முன் இன்னமும் சிறப்பாக என்னை தயார் செய்துகொள்ள வாய்பாக அமைந்தது இந்த அனுபவம்.    


மணி கைவேலை (BEAD HAND WORK)

                                மணி கைவேலை (BEAD HAND WORK)


கைவினை பொருள் செய்வதில் எனக்கு எப்பொழுதுமே ஒரு அலாதி பிரியம் உண்டு. மூதாதயரின் மன சிந்தனை என்னிடமும் அப்படியே இருந்தது. பாட்டி,அம்மா,பெரியம்மா இவர்கள் மட்டும் அல்லாது,  என்னுடைய அத்தையும் கைவேலை நன்கு செய்வார். அம்மாதான் என்னுடைய முதல் குரு. கை எம்பிராய்டரி, கிராஸ் ஸ்டிச், அட்டை மற்றும் சிரிய பெட்டி, (தீபெட்டி போன்று) காலி பாட்டில்கள் இவைகளை பயன்படுத்தி பொருள் செய்வது என்று என்னடைய வேலையும் ஆர்வமும் தொடர்ந்துக்கொண்டே சென்றது. 6வது படித்துக்கொண்டிருக்கம் போது, என்பக்கத்து வீட்டில் ஒரு மருத்துவர் புதிதாக குடித்தனம் வந்தார்கள். அவருடைய மனைவி மணிகளை பயன்படுத்தி பல  வகையான பொருட்கள் செய்தார். குறிப்பாக(வீட்டு நிலைபடியில் மாட்டும், நல்வரவு போன்று) செய்துக்கொண்டிருந்தார். எனக்கு அதை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள மிகவும் ஆசை ஏற்பட்டது. நான் பச்சை கலரில் வெள்ளை நிறத்தில் எழுத்துவருமாறு செய்வது என்று தீர்மானித்தேன். அவர் ஒவ்வொரு எழுத்தாக போடுவது போன்று சொல்லிக்கொடுக்காமல், ஒரே சமயத்தில் அனைத்து எழுத்தும் வருவது போன்று சொல்லி கொடுத்ததால் எனக்கு தவறு அதிகமாக வந்தது. அவர் உடனே சுந்தரி நீ பேசாமல் பச்சை வண்ண மணியில் போட்டு விட்டு, வெள்ளை நிற பெயிண்ட் வாங்கி வெல்கம் என்று எழுதி விடு என்று கேலி செய்தார். எனக்கு மிகவும் கோபம் வந்து நான் அவர்கள் வீட்டுக்கு பிறகு செல்லவேயில்லை. நான் மணி வேலை நன்கு தெரிந்தவர்கள் எங்கு இருக்கின்றனர் என்று விசாரித்து அவர்கள் வீட்டில் ஒரு நாள் முழுவதும் அமர்ந்து போட கற்றுக்ககொண்டு வந்தேன். நான் அனைவரிடமும் நன்கு பேசி பழகும் குணம் இருந்ததால், சொல்லி கொடுத்தவருக்கு என்னை மிகவும் பிடித்து விட்டது. என்னை தூக்கி  கொஞ்சினார் அந்த பெண்மணி. (அப்பொழுது எனக்கு வயது 11) இரண்டு ஒயர்(நரம்பு) பயன் படுத்தி எப்படி போடுவது, ஒவ்வொரு எழுத்தாக எப்படி போடுவது, என்று மிக அன்பாக சொல்லிக்கொடுத்தார். அது மட்டுமல்லாமல் அவர் ஏற்கனவே போட்ட ஒரு மாதிரியையும் எனக்கு கொடுத்து போட சொன்னார். நான் ஒருவாரத்தில் அவரின் வழிகாட்டுதலில் சிறப்பாக முடித்து விட்டேன். இவ்வாறாக நான் மூன்று ஆண்டுகள் மணி வேலையில் மிக மும்முரமாக இருந்தேன். பள்ளி படிப்புக்கூட இரண்டாம் நிலையாக இருந்தது. மணி வேலைபாட்டின் உச்சமாக என்னுடைய அப்பாவின் மாமா என்று ஒரு தூரத்து உறவினருக்கு வெல்கம், என்பதை நிலையில் மாட்டுவதற்க்கும், ஸ்ரீ RAMAJAYAM சாமி படங்களுடன் மாட்ட வாங்கி சென்றார்.


நான் தலா 15ரூபாய்கும், 18ரூபாய்கும் விற்பனை செய்தேன். பின்னாளில் அவரே எனது மாமனார். வரும் ஐனவரியில் எனக்கு திருமணமாகி 32 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இன்றளவும் அந்த SRIRAMAJAYAM. WELCOME இரண்டும் என்னுடைய கணவரின் பெரிய அண்ணன் வீட்டில் மாட்டப்பட்டுள்ளது. 

இரண்டாவது உச்சம் தலையில் பூஜடை போன்று பயன் படுத்தும் மணி வங்கியை எப்படி போடுவது என்பதை 30 வயதுக்கு மேற்பட்ட பல பெண்மணிகள் என்னிடம் வந்து கற்றுக்கொண்டு போனார்கள். கற்றுக்கொடுத்த எனக்கு வயது 13. எனக்கு இதில் பெரும் மகிழ்ச்சி மட்டும் இன்றி பெருமைவேறு. 40 ஆண்டுகளுக்கு பிறகு நான் விலை உயர்ந்த கிரிஸ்டல் மற்றும் முத்து பயன்படுத்தி மணி வேலை (Key Chain)


செய்து எனது மகளுக்கும் மருமகளுக்கும் பரிசளித்துள்ளேன். மீண்டும் என்னுடைய அடுத்த Blog-ல் சந்திப்போம்.

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...