காஞ்சிபுரம் சிவாலயங்கள்

 காஞ்சிபுரம் சிவாலயங்கள் (தரிசனநாள்-30.6.2024)

காஞ்சிபுரம்;

மிகவும் பழமையான கோவில் நகரமான காஞ்சிபுரத்தில், 165 சிவன் கோவில்களும், 16 பெருமாள் கோவில்களும் உள்ளதாக, கோவில் பெயருடன் வரைபடத்தையும்,  காஞ்சி சிவப்பணித்தொண்டர்கள் வெளியிட்டுள்ளனர்.




இந்த செய்தி காஞ்சி கட்சபேஸ்வரர் கோவிலில் அறிவிப்பு பலகையாக உள்ளது. 

1. மதங்கீஸ்வரர் கோவில்.












நந்திவர்ம பல்லவன் காலத்து கோவிலாகும். காஞ்சிபுராணத்தில் ஒரு உட்கோவிலாக சொல்லப்படுகிறது. மதங்க முனிவர் இப்பெருமானை வழிபட்டு ஐம்புலன்களையும் அடக்கும் ஆற்றலை பெற்றார். இக்கோவில் பெரிய காஞ்சிபுரத்தில் ஹாஸ்பிடல் ரோடு, மிஷன் மருத்துவமனை, அருகில் அமைந்துள்ளது. தொல்லியல் துறை மேற்பார்வையில் உள்ளது.

2. முக்தேஸ்வரர்.









இக்கோவில் காஞ்சி புராணத்தில் உட்கோவிலாக கூறப்படுகிறது. ராஜசிம்ம பல்லவனின் இறுதிகால ஆட்சியின் சமயம் கட்டப்பட்ட கோவிலாகும். பல்லவரின் ஆதிட்டானம்  தரை மட்டத்தில் இருந்து 8அடி உயரத்தில் உள்ளது. 12 சதுர அடி அர்த்தமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. சிங்கதூன் சிற்பக்கலை மற்றும் மேடை சிற்ப அலங்காரம் மாமல்லபுரத்தின் தர்மராஜ ரதத்தினை ஒத்துள்ளது. வாமதேவர் கைலையில் இருந்து கொண்டுவரப்பட்ட லிங்கம் என்ற நம்பிக்கையுள்ளது. பெரிய காஞ்சிபுரத்தின் வட பகுதியில் கம்மாளத்தெருவில் அமைந்துள்ளது. திருகுறிப்புதொண்டர் நாயனார், முக்தி பெற்ற இடமாகவும் போற்றப்படுகிறது. தொல்லியல் துறை மேற்பார்வையில் உள்ளது.

3. இறவாதீஷ்வரர் (எ) ஸ்ரீம்ருத்திஞ்ஜயேஷ்வரர்.






இக்கோவில் பற்றிய குறிப்பும் காஞ்சி புராணத்தில் உள்ளது. 16 தூண்களை கொண்ட மகா மண்டபம், மற்றும் புற பிரகாரம் கொண்டது இந்த கோவில். மார்கண்டேயர், சுவேதன், சாலங்காயன முனிவர் இத்தல சிவனை வழிபட்டு இறவாநிலைஅடைந்தனர். பெரிய காஞ்சிபுரம், கம்மாள தெரு (ஜவர்ஹலால் தெரு) கடைசியில் பச்சை வண்ணர் பெருமாள் கோவில் அருகில் அமைந்துள்ளது.

4.பிறவாதீஸ்வரர்.. 


வாமதேவர் காஞ்சிக்கு வந்து பிரதிஷ்டை செய்து வணங்கி பிறவானந்தம் அடைந்தார். இறவாதீஸ்வரர் கோவிலுக்கு சற்று எதிராக அமைந்துள்ளது இந்த கோவில். ஒருகால பூஜை கோவிலாக உள்ளதால், விளக்கேற்றி பூஜை முடிந்துவிட்டது. நாங்கள் பூட்டி இருக்கும் கோவிலை வழிபட்டு பிறவா வரம் வேண்டி வந்தோம்.

5. திருவீரட்டானேஸ்வரர். (சாக்கியநாயனார் முக்திதலம்)





அருள்மிகு காமாட்சி சமேத திருவீரட்டானேஸ்வரர், அப்பாராவ் தெரு, காமராஜர் பகுதியில் எழுந்தருளியுள்ளார். காஞ்சிபுரத்தில் திருக்குறிப்பு தொண்டர் நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், மற்றும் சாக்கியநாயனார் மூவரும் முக்தி  பெற்ற தலமாகும். சாக்கியநாயனார் மன்னனுக்கு பயந்து சமணமதத்தை பின்பற்றிவந்தார். சமணமத உடை அனிந்து தினமும், மனதில் பக்தி கொண்டு சிவலிங்கத்தின் மேல் கல்எறிந்துவந்தார். (சைவமதத்தை எதிர்ப்பு வெளிபடுத்த) ஒருநாள் கல்எறியும் வழிப்பாட்டை மறந்து, உணவருந்த  உட்கார்ந்துவிட்டார். சிவன் என்னை வழிபட மறந்தனையோ என்று உணர்த்த உடனே கோவிலுக்கு சென்று கல்எறிந்து வழிபட்டார். சிவன் உமையுடன் காட்சி கொடுத்து ஆட்கொண்டார் என்பதே இங்கு நிகழ்ந்த வரலாறு. இன்றளவும் சாக்கியநாயனார் எறிந்த சிறிய கற்கள் சிவலிங்கத்திற்;கு பின் புறம் உள்ளன. லிங்கத்தின் மீதும், கல் பட்ட சுவடு காணப்படுகிறது. நடராஜர், சிவகாமி, நால்வர் இவர்கள் உருவம் சிலையாக இல்லாமல் சுவற்றில் ஓவியமாக வரைந்து வழிபாடு நடத்தப்படுகிறது. நான்கு வேதங்களும் நான்கு லிங்கமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடுநடக்கிறது.

6. தான்தோன்றீஸ்வரர்.












காஞ்சி புராணத்தில் இக்கோவில் பற்றிய குறிப்புள்ளது. வண்டார்குழலி சமேத தான்தோன்றீஸ்வரர் கோவில் ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி தெருவில் உள்ளது. மகேந்ரவர்ம பல்லவன் காலத்தில் மணற்கற்சிற்பங்களாக கட்டப்பட்டது. புனரமைப்பு  காரணமாக இதன் பழமை முற்றிலும் மறைந்து இக்கோவில் காணப்படுகிறது. பல்லவமன்னன் மகேந்ரவர்மன் எழுதிய இரண்டு புகழ்பெற்ற நாடகங்களில் “மந்தவிலாச பிரஹாசனம்”; என்பதும் ஒன்று. சைவ மத காபாலிகள் மற்றும் பாசுபதம், மற்றும் புத்த சமன மதங்களை கேலி செய்தும், 7 ஆம் நூற்றாண்டில் காஞ்சி மாநகர் தோற்றம் பற்றியும் இந்த நாடகத்தில் குறிப்பிட பட்டுள்ளது. நாடக காட்சிகளின் சிற்ப வடிவங்கள் சிற்பங்களாக இந்த கோவில் உள்ளன.

7. காயாரோகணீஸ்வரர் (தேவாரபாடல் பெற்ற தலம்)







காஞ்சி புராணத்தில் ஒரு தனி படலமாகவே இக்கோவில் பற்றிய குறிப்புள்ளது. இது தேவார பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது. காலபதம் முடிந்த பிரும்மா, விஷ்னு இருவருடை ரோகத்தை தன்னுள் ஆரோகணம் செய்து கொண்டதால் இத்தலம் இப் பெயர் பெற்றது. காஞ்சிபுரம் வேகவதி ஆற்றங்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது. (காயம்- உடம்பு).

உடலுடன் முக்தி அடைய விரும்பிய முனிவர் ஒருவர் காஞ்சி காயாரோகணீஸ்வரர், குடந்தை காயாரோகணீஸ்வரர், நாகை காயாரோகணீஸ்வரர் இவர்களை வழிபட்டு, காயம் என்ற உடலுடன் முக்திஅடைந்தார்.

8. கைலாசநாதர்.




















1500 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவமன்னர்களால் கட்டபட்ட மிக அற்புதமான கட்டிட கலைக்கு, எடுத்துகாட்டாக விளங்குகிற கோவிலாகும்.  விஜயநகர பேரரசு காலத்திலும் இதன் பராமரிப்பு மற்றும் வளர்ச்சி சிறப்பாக இருந்தது. இந்திய தொல்பொருள் ஆய்விற்;கு கீழ் பராமரிக்கப்படுகிறது. (காஞ்சிபுரத்தில் பல கோவில்கள் குறிப்பாக, பல்லவமன்னர்களின் அழகு சிற்பம் நிறைந்த கோவில்கள் தொல்பொருள் ஆய்வு துறையால் பராமரிக்கப்படுகிறது). மக்களால் நன்கு அறியபட்ட கோவில்களில் இதுவும் ஒன்று.

9. கச்சி அநேகதங்கவாதம் (தேவார திருத்தலம்).









சுந்தரரால் பாடப்பெற்ற தலம். யானை முகம் கொண்ட விநாயகபெருமானால் அமைக்கப்பட்டு வழிபட்ட தலம்.  கைலாசநாதர் கோவிலில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ளது. குபேரன் வழிபட்ட திருத்தலம். காஞ்சி புராணத்தில் குறிப்பிடபட்டுள்ள கோவில். கோவில் இடதுபுறத்தில் தாமரை மலர்கள் நிறைந்த குளம், மிக சிறிய முகப்புடன் கோவில் காணப்படுகிறது. ஆனால் கோவில் இயற்கை எழிலுடன் உள்ள பெரிய வளாகத்தில் அமைந்துள்ளது. விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, நால்வர், பலிபீடம், நந்தி மண்டபம் என்று மிக சிறப்பாக அமைந்துள்ளது.

10. ஏகாம்பரநாதர். (தேவார வைப்புத்தலம்)











காஞ்சி புராணத்தில் திருகச்சியேகம்பம் என்று இந்த தலம் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவாரபாடல்பெற்ற தலங்களுல் ஒன்றாகவும், பஞ்சபூததலங்களுள் ஒன்றாகவும் உள்ளது. திருகுறிப்புதொண்டர் நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், கழற்சிங்கநாயனார் இவர்களின் அவதார தலம் மற்றும் சாக்கிய நாயனார் முக்திதலம் இந்த காஞ்சிபுரம். இந்த நாயன்மார்களின் திருவுருவச்சிலை இங்குள்ளது. அம்பிகை ஏலவாரகுழலி கம்பையாற்றின் கரையில் உள்ள இறைவன் லிங்க திருமேனியை பூஜிக்கும் சமயம் ஆற்றில் பெருவெள்ளளம் உண்டானது. இதை கண்டு அச்சமமுற்று அம்பிகை லிங்கத்தை ஆலிங்கனம் செய்து கொண்டார். இதன் காரணமாக இறைவன் தழுவகுழைந்தநாதர் என்று அழைக்கப்படுகிறார். 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மாமரமே தலவிருட்சமாக உள்ளது.

11. ஜுரகரேஸ்வரர்.










பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் இக்கோவிலை கட்டியதாக நம்பப்படுகிறது. குலோத்துங்க சோழன் காலத்;தில்; கட்டப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. இந்திய தொல்லியல் துறையால் இக்கோவில் பராமரிக்கப்படுகிறது. மன்மதனை நெற்றிகண் கொண்டு சிவபெருமான் எரித்த நேரத்தில் உன்டான வெப்பம் காரணமாக தேவர்கள் ஜுரம் வந்து துன்பபட்டு இத்ல சிவனை வழிபட்டு நோய் நிவர்தியடைந்தனர், என்று இக்கோவிலில் இறைபணி செய்து கொண்டிருந்த சிறுவன் இத்தல புராணத்தை எங்களுக்கு விளக்கினான்.

12. அமரேஸ்வரர்.








 அசுரர்களை வென்ற தேவர்கள் தாங்களே அசுரரை அழித்தோம் என்று கர்வபட்டனர். சிவன் இவர்களின் ஆணவத்தை அடக்க ஒரு துரும்பை போட்டு வெற்றி பெற்றவர்களே வீரர்கள் ஆவீர்கள் என்று கூறினார். உடனே தேவர்கள் அனைவரும் அந்த துரும்பை அழிக்க முற்பட்டு முடியாமல் சோர்வுற்றனர். அப்பொழுது இறைவன் தோன்றி, அனைத்து செயல்களும் விதி வழியே நடக்கிறது, நம் செயல் எதுவும் இல்லை என்று உணர்ந்து, ஈசனை வழிபட்டனர். வழிபட்ட இடமே இந்த அமரேஸ்வரம்.  கட்சபேஸ்வரர் கோவில் சன்னதிதெருவில், முதல் இடதுபுற தெருவில் இக்கோவில் அமைந்துள்ளது.

13. ஜராவதீஸ்வரர்.











காஞ்சி புராணத்தில் இக்கோவில் பற்றிய குறிப்புள்ளது. பல்லவர்கள் கட்டிய கோவில். திருப்பாற்கடலை கடையும் நேரம் வந்த வெள்ளை நிற யானை, ஜராவதம் யானை. இந்திரனை தாங்கும் சக்தி வேண்டி இங்க இறைவனை பூஜித்ததாக அறியப்படுகிறது. ராஜவீதியில் அமைந்துள்ள கட்சபேஸ்வரர் கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ளது.

14. கட்சபேஸ்வரர்.







காஞ்சி புராணத்தில் இக்கோவில் பற்றி தனி படலமே உள்ளது. வெளிபிராகாரத்தில் உள்ள விநாயகர் பொய்யாமொழி விநாயகர் என்றும் சத்தியமொழி விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். காஞ்சியில் ராஜவீதியில் இக்கோவில் அமைந்துள்ளது. பார்கடலை கடைந்து அமுதம் எடுத்தவுடன், திருமால் கடலை ஒருகலக்கு கலக்கினார். இதனால் கடல் உயிரினங்கள் அமைத்தும் அச்சமுற்றது. இதற்கு வருந்தி இத்தல ஈசனை வழிபட்டார், பெருமாள் ஆமைவடிவில். இதனால் இத்தல இறைவன் கட்சபேஸ்வரர் என்று அருள்பாலிக்கிறார்.

தேவாரவகுப்பு கானொளி. 


 

ஏகாம்பரநாதர் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் சிவலங்கம் பின் சுவற்றில் சோமாஸ்கந்தர் (சிவன் பார்வதி, முருகன்) உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வகைஅமைப்பு காஞ்சி கோவிலின் சிறப்பாகும். இத்தகைய அமைப்பு தமிழ்நாட்டில் ஒரு சில கோவில்களில் மட்டுமே உள்ளது. 

ஓம்நமசிவாயா.


சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...